

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நாளை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அணை நிலவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 15 ஆயிரத்து 740 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 29 ஆயிரத்து380 கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் 114.46 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 116.10 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு 87.38 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 100 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 400 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பிவிட்டதால், அவற்றில் இருந்து உபரிநீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், காவிரியின் தமிழக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. எனவே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். இதனால், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான120 அடியை விரைவில் எட்ட வாய்ப்புள்ளது.
அணை நிரம்பினால், உபரிநீரை வெளியேற்றவும், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், அதனைக் கண்காணிக்கவும் பொதுப்பணித்துறை சார்பில்அணை வளாகத்தில் வெள்ள நீர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை நிரம்ப வாய்ப்பு
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், நாளை (9-ம் தேதி) அணை முழுகொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. நீர்வரத்தை கண்காணிக்க அணைவளாகத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுமையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 8 உதவி பொறியாளர்கள் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் வெள்ள நிலவரத்தைக் கண்காணித்து வருகின்றனர். அணை நிரம்பியதும், 1 மணி நேரத்துக்கு ஒருமுறை வெள்ள நிலவரம் கண்காணிக்கப்பட்டு, தேவைக்கேற்ப உபரிநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.