Published : 08 Nov 2021 01:09 AM
Last Updated : 08 Nov 2021 01:09 AM

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு: வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

சென்னை

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றுஅதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சிதொடர்வதால் 8-ம் தேதி (இன்று)சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் சில நேரங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை,தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர்,திருச்சி, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புஉள்ளது. இது மேலும் வலுப்பெற்று வட தமிழகம் நோக்கி நகரக்கூடும். அதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சில நேரங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதால் வங்கக் கடலில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள், 9-ம்தேதிக்குள் கரை திரும்ப வேண்டும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அதிகனமழை ஏன்?

வானிலை தரவுகள் அடிப்படையில் கணிக்கப்பட்டதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்தது. சென்னைக்கு வழங்கப்படவில்லை. இதனிடையே, 6-ம் தேதி இரவு குறுகிய நேரத்தில் ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் இரவு 10 மணிவரை 3 செ.மீ., நள்ளிரவு 1 முதல்1.45 மணி வரை 6 செ.மீ., அதிகாலை 5 முதல் 6 மணி வரை 7 செ.மீ. மழை பெய்துள்ளது. இதுதொடர்பாக உடனுக்குடன் வானிலை ஆய்வு மையம் சார்பில் தொடர்ந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. நுங்கம்பாக்கத்தில் 21 செ.மீ. மழை பெய்த நிலையில், அருகில் உள்ள மீனம்பாக்கத்தில் 11 செ.மீ. மட்டுமே பெய்துள்ளது. குறுகிய காலத்தில் ஏற்படும் மாற்றங்களை முன்கூட் டியே கணிப்பது சிரமம்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 23 செ.மீ., நுங்கம்பாக்கம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 21, அயனாவரத்தில் 18, அண்ணா பல்கலைக்கழகத்தில் 16, புழலில் 15, சென்னை விமானநிலையத்தில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் இதுவரை 23 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டுஇதுவரை 33 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட 43 சதவீதம் அதிகம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. உபரிநீர் செல்லும் ஆற்றின் இருகரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு 4 லட்சம் பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம், மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகின்றுன. பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களை 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாக தெரிவிக்கலாம். மேலும், TNSMART இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம். மழைக்காலங்களில் தொற்று வியாதிகள், டெங்கு போன்றவை பரவாமல் இருக்கவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x