

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் போலியான பயனாளிகள் குறித்த பதிவுகள் செய்யப்படுவதாகவும், அவ்வாறு போலியான பெயர்களில் பதிவு செய்யப்படுவோருக்கான தடுப்பூசிகள் வெளிச்சந்தைக்கு விற்பனை செய்யப்படுகிறதா அல்லது எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கத்துக்காக அவ்வாறு செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தீவிரமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்த கடந்த 8 வாரங்களாக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதனால், தமிழகத்தில் இதுவரை 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவிக்கிறது.
இந்த நிலையில் சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சில முறைகேடுகள் ஆங்காங்கே அரங்கேறி வருவதாக சுகாதாரத் துறை அலுவலர்களே குற்றம்சாட்டி வருகின்றனர். தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களுடன் செல்போன் எண்ணும் வழங்க வேண்டும். அதன்பின் முதற்கட்ட தடுப்பூசி செலுத்திய பின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன்மூலம் அவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது அரசு சார்பில் உறுதி செய்யப்படுகிறது. அதேபோன்று 2-ம் கட்டத் தடுப்பூசிக்கும் இதே நடைமுறை உள்ளது.
ஆனால் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயன்பாடற்ற செல்போன்களை பயன்படுத்தி, ஆதார் அட்டைக்கு மாற்றாக ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை பயன்படுத்தி 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பதிவேற்றம் செய்து விடுகின்றனர். ஆனால் அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி செல்வது முடக்கி விடுகின்றனர். அதேவேளையில் முதல் கட்டத் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர் 2-ம் கட்டத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும்போது, வேறு ஆவணங்களைக் கொண்டு அவருக்கு தடுப்பூசி செலுத்துவதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர் தனக்கு குறுஞ்செய்தி வரவில்லை எனக் கேட்டால், சிக்னல் கோளாறு இருக்கும் எனக் கூறி, அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை வழங்குவதாக கூறப்படுகிறது.
இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், விஜயா என்ற பெண் முதல் தடுப்பூசிபோட்டுக் கொண்ட நிலையில், 2-ம் கட்டத் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பாக உயிரிழந்துள்ளார்.சிறிது நாட்கள் கழித்து அவர் 2-ம் கட்டத் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அவரது குடும்பத்தார் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகியபோது, செல்போன் எண் மாறி தகவல் வந்து விட்டது எனக் கூறி திருப்பியனுப்பியுள்ளனர்.
தடுப்பூசி செலுத்துவதில் இத்தகைய முறைகேடு நடைபெறுவது எண்ணிக்கையை மிகைப்படுத்தி காட்டுவதற்கா அல்லது போலியாக செலுத்தப்படுவதாகக் கூறப்படும் தடுப்பூசிகள் வெளிச்சந்தைக்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பது புரியாமல் சுகாதாரத்துறை அலுவலர்களே குழப்ப நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பூங்கொடியிடம் கேட்டபோது, "தடுப்பூசி செலுத்துவதில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பே கிடையாது. உளுந்தூர்பேட்டை சம்பவம் செல்போன் எண் மாறி குறுஞ்செய்தி சென்றுள்ளது. அதை சரிசெய்துவிட்டோம்" என்றார்.