Published : 08 Nov 2021 01:09 AM
Last Updated : 08 Nov 2021 01:09 AM

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் இரவு நேரத்தில் பக்தர்களை அனுமதிக்க கோரி பாஜக போராட்டம்

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் வளாகத்தில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்க அனுமதி வழங்க கோரி போராட்டம் நடத்திய பாஜகவினர் 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் பங்கேற்பின்றி நாளை (9-ம் தேதி) மாலையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் வெளியூரில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிகின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கையால் கோயில் வளாகத்தில் இரவு 8 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், கோயில் கலையரங்கம் மற்றும் வளாகத்தில் தங்கும் பக்தர்களை போலீஸார் வெளியேற்றுகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோயில் வளாகத்தில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதிக்க கோரியும் நேற்று முன்தினம் இரவு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் வளாகத்தில் தூத்துக்குடி மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் பிரபு தலைமையில் போராட்டத்தில் பங்கேற்றனர். திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் அங்கு வந்து பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தை கைவிட மறுத்ததால், பாஜகவினர் 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்து முன்னணி போராட்டம்

பாஜகவினர் போராட்டம் நடத்தியதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு இந்து முன்னணியினர் பிரார்த்தனை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் சண்முக விலாச மண்டபம் பக்தர்களால் பிரார்த்தனை கூடமாக பயன்படுத்தப்படுகிறது. மாசி, ஆவணி திருவிழாவின் போது சண்முகர் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருள்வார். தற்போது சண்முக விலாச மண்டபத்தினுள் பக்தர்கள் செல்ல முடியாதவாறு மூன்று புறமும் தடுப்பு வேலிகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும், சண்முக விலாச மண்டபத்தை திறக்க கோரியும் இந்து முன்னணியினர் மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் பிரார்த்தனை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் பிரபாகர், நகர தலைவர் மாயாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தால் திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x