

அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, ஆலந்தூர் எம்எல்ஏ வெங்கட் ராமன் ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த எம்.ஆர்.சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
குட்டி ராமதாஸ் என்பவர்2012-ம் ஆண்டு என்னிடம் ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் பணமும், 7 சவரன் நகையும் கடனாக வாங்கிச் சென்றார். அதை திருப்பித் தர மறுத்ததோடு, எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, எம்எல்ஏ வெங்கட்ராமன் உள்ளிட்டோரின் தலையீட்டால் போலீஸார் வழக் குப் பதிவு செய்யவில்லை.
உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் என்னைக் கொலை செய்ய அமைச்சர் சின்னையா, எம்எல்ஏ வெங்கட்ராமன் உள்ளிட்டோர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆதம்பாக்கம் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளேன். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, எனது புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் சரவணன் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம், “மனுதாரரின் புகார் தொடர்பாக காவல் துணை ஆணையர் புலன் விசாரணை நடத்தியுள்ளார். மனுதாரரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் அடிப்படை யில் புகார் மீது தொடர் நடவடிக்கை தேவையில்லை என கருதி காவல் துணை ஆணையர் வழக்கை முடித்து வைத்துள்ளார்” என்று தெரிவித்தார். அது தொடர்பான அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
வாக்குமூலத்தை போலீஸாரே எழுதி, மனுதாரரைக் கட்டாயப் படுத்தி கையொப்பம் மட்டும் பெற்றுக் கொண்டதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதுதொடர்பாக தனியாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஒரு வார காலத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார்.