

“தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும்” என, கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
தூத்துக்குடியில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கனிமொழி எம்.பி., தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் பார்வையிட்டனர். தூத்துக்குடி செயின்ட் தாமஸ் பள்ளி சந்திப்பு, பாளையங்கோட்டை சாலையில் வஉசி கல்லூரிக்கு எதிரே உள்ள பகுதியில் சாலைகளை சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர்.
கனிமொழி எம்.பி. கூறும்போது, “ மழை காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, குழிகளை உடனடியாக சிமென்ட் கலவை மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மாநகராட்சி பகுதி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் சாலைகளில் உள்ள குழிகள், பள்ளங்கள் நிரப்பப்படும். மழைக் காலம் முடிந்தபிறகு இந்த சாலைகள் அனைத்தும் முழுமையாக சீரமைக்கப்படும்” என்றார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் தி.சாரு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.