Published : 07 Nov 2021 04:44 PM
Last Updated : 07 Nov 2021 04:44 PM

புவிவெப்பமயமாதலை தடுக்க ஊர்தோறும் மின் நிலையங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை 

புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளை தடுக்க ஊர்தோறும் மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட அனல் மின்னுற்பத்தி நிலையங்களைப் படிப்படியாக மூடப் போவதாக 40 நாடுகள் அறிவித்திருக்கின்றன. அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை என்றாலும் கூட இந்த முடிவு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உலகைக் காக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.

அணு ஆயுதங்கள், கொடிய நோய்கள் ஆகியவற்றை விட இந்தப் பூவுலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக புவிவெப்பமயமாதல் உருவெடுத்துள்ளது. அதன் பேரழிவுகளைத் தடுப்பதற்காக சராசரி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் காலநிலை மாற்ற மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு ஆகும். அந்த இலக்கை அடைய நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட படிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பது தான் முதன்மைத் தேவையாகும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் இன்னும் குறிப்பிடும்படியாக தொடங்கப்பட வில்லை. அது பெரும் கவலையாக உருவெடுத்து வந்த நிலையில், இப்போது நிலக்கரி மின் நிலையங்களை முடிவுக்குக் கொண்டு வர 40 நாடுகள் முன்வந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளும் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். இந்தியாவும் சீனாவும் தான் உலகின் ஒட்டுமொத்த நிலக்கரியில் மூன்றில் இரு பங்கை பயன்படுத்துகின்றன. உலகில் மிக அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் 20 நாடுகள் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தோனேஷியா, தென்கொரியா, வியட்நாம், போலந்து, உக்ரைன் ஆகிய 5 நாடுகள் நிலக்கரி மின்னுற்பத்தியை கைவிடுவதாக அறிவித்துள்ள நிலையில், மற்ற நாடுகளும் அந்த முடிவை எடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. இந்தியா உள்ளிட்ட நாடுகள் நினைத்தால் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் நிலக்கரி மின்னுற்பத்தியை கணிசமாகக் குறைத்து விட முடியும். புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த அது மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும்.

உலகின் பல நாடுகளில் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளூர் அளவிலும் சூரிய ஒளி மின்னுற்பத்தி, காற்றாலை மின்னுற்பத்தி ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பசுமை மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்பது மட்டுமின்றி, பொருளாதார அடிப்படையிலும் இலாபம் பெற முடியும். இதை மனதில் கொண்டு தான் ஊருக்கு ஒரு மரபுராசாரா மின்னுற்பத்தி நிலையம் என்ற வாக்குறுதியை கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்திருந்தது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தலா ஒரு மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின்நிலையம் அமைக்கப்படும். இதில் கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு, அந்த ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு மட்டும் மின்சாரம் வழங்கப்படும். இது 10 ஆண்டு நீண்டகாலத் திட்டமாகச் செயல்படுத்தப் படும். இதற்கான செலவை அரசே ஏற்கும்’’ என்பது தான் அந்த வாக்குறுதி ஆகும். தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களிலும் சூரிய ஒளி கிடைக்கும் என்பதால் இத்திட்டம் சாத்தியமானது தான். இது தவிர காற்று அதிகம் வீசும் பகுதிகளில் காற்றாலை மின்திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்த முடியும். அதனால் உள்ளூர் மக்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் மின்சாரம் கிடைக்கும் என்பதுடன், உள்ளாட்சிகளின் நிதி நிலையும் மேம்படும். அது உள்ளூர் அளவிலான வளர்சிக்கு பெரிதும் வழிவகுக்கும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இந்தத் திட்டம் சாத்தியமானது தான் என்பதை கோவை மாவட்டம் ஓடந்துறை கிராம ஊராட்சி நிரூபித்திருக்கிறது. ஓடந்துறை ஊராட்சியில் 2006-ஆம் ஆண்டில் 0.35 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்சார உற்பத்தி, வீடுகளுக்கு தனித்தனியாக சூரிய ஒளி மின் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தியதால் அக்கிராமம் மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி மிச்சமாகும் 2 லட்சம் யூனிட் மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.5 லட்சம் வரை வருமானமும் கிடைக்கிறது. அது ஓடந்துறை கிராமத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கிறது.

ஓடந்துறையில் செயல்படுத்தப்பட்டது போன்ற மரபு சாரா மின்திட்டங்களை அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்த முடியும். 2025&ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய நிலக்கரி மின்னுற்பத்தித் திட்டங்களைத் தொடங்க முடியாது என்பதால் இத்திட்டம் அவசியமாகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் சராசரியாக ரூ.2 முதல் 3 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். இதன் மூலம் மின்னுற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியும். அதுமட்டுமின்றி, அடுத்த 10 ஆண்டுகளில் நிலக்கரியையை எரிபொருளாகக் கொண்ட மின்னுற்பத்தியை கைவிட முடியும். அதன் மூலம் புவிவெப்பமயமாதலுக்கு இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு ஈடு இணையற்ற பங்களிப்பைச் செய்ய முடியும். எனவே, இதற்கான சிறப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி, மத்திய அரசு, உள்ளாட்சிகளுடன் இணைந்து செயல்படுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x