மீனவர் நிவாரண தொகையில் கடன் பிடித்தம் நிறுத்திவைப்பு: சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன் எம்.பி. | கோப்புப்படம்
சு.வெங்கடேசன் எம்.பி. | கோப்புப்படம்
Updated on
1 min read

ராமநாதபுரம் மீனவர் கிராமத்தில் மீனவர் நிவாரண தொகையில் கடன் பிடித்தம் செய்து வந்த வங்கிகள் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தலையீடு காரணமாக நிறுத்தி வைத்துள்ளன.

தமிழ் நாடு அரசு சமீபத்தில் மீனவர்களுக்கு வழங்கிய மழைக்கால நிவாரணம் வழங்கியது. நிவாரணம் வழங்கப்பட்ட தொகைக்காக கல்விக் கடன், நகைக் கடன் பிடித்தங்கள் வங்கி கிளைகளில் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. மீனவர்களின் இந்த புகார்களை அடுத்து சு.வெங்கடேசன் எம். பி வங்கி அதிகாரிகளிடம் பேசியதில் அத்தகைய பிடித்தம் செய்யப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பிடித்தங்கள் ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தில் உள்ள ஒரு அரசு வங்கியில் செய்யப்படுவதாக ஒரு மீனவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சமூக வலைத் தளக் கணக்கில் பதிவிட்டு இருந்தார். உடனடியாக வங்கியின் மண்டல அதிகாரிகள் இடம் பேசியதில் அத்தகைய பிடித்தங்களை நிருத்துவதாகவும், பிடித்த பணத்தை மறு வரவு செய்வதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறியதாவது:

"கந்து வட்டிக்காரர்களின் மனநிலை அரசு வங்கிகளுக்கு கூடாது என்று பேசினேன். இது மீனவர்களின் உடனடி அன்றாட வாழ்க்கை செலவுகளுக்காக அரசால் தரப்படுவது ஆகும். இதைப் பிடித்தம் செய்து விட்டால் எப்படி ஏழை எளிய மீனவ மக்கள் வாழ்க்கையை ஓட்ட முடியும்? எல்லா வங்கிகளும் இதை கருத்தில் கொள்ள வேண்டும். வேறு எந்த மீனவ கிராமங்களில் வழங்கப்பட்ட நிவாரணம் இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்டு இருந்தால் அதுவும் மறு வரவு வைக்கப்பட வேண்டும். அதற்கான உரிய அறிவுறுத்தல்கள் அனைத்து வங்கி கிளைகளுக்கும் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகங்களால் உடன் வழங்கப்பட வேண்டும்"

இவ்வாறு சு. வெங்கடேசன் எம். பி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in