

புதுச்சேரி புதுச்சேரியில் பிரெஞ்சு கவுன்சிலர் தேர்தலில் மழையிலும் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
மாலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வெளிநாடு வாழ் பிரெஞ்சு குடிமக்களுக்காக மழையிலும்பிரெஞ்ச் குடிமக்கள் சபையை பிரான்ஸ் நாடு ஏற்படுத்தியுள்ளது.
அந்தந்த நாடுகளில் உள்ள பிரெஞ்ச் துணை தூதரகங்கள் தேர்தல் நடத்தி இந்த சபைக்கான பிரெஞ்ச் கவுன்சிலர்களை தேர்வு செய்கின்றன.
கடந்த 2014ம் ஆண்டு பிரெஞ்சு கவுன்சிலர் தேர்தல் நடந்தது. இவர்களின் பதவிக் காலம் 2020ம் ஆண்டு முடிந்தது. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளிலும் கவுன்சிலர் தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது. இந்திய தொகுதியில் மே மாதம் கரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் தேர்தல் நடக்கவில்லை. தள்ளி வைக்கப்பட்ட இந்திய பிரெஞ்ச் கவுன்சிலர் தேர்தல் இன்று நடந்தது.
சிவா பிரதீபா, சிவா திரு, தாவீது சாந்தால், நிஷா உள்ளிட்டோர் தலைமையில் 5 அணிகள் போட்டியிட்டது இவர்களில் 3 பேர் கவுன்சிலர்களாக வாக்கு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பிரெஞ்சு தூதரகம், அலையான்ஸ் பிரான்சிஸ் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் பிரெஞ்சு குடிமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். காரைக்காலில் தனி வாக்கு சாவடி அமைக்கப்பட்டு வாக்கு பதிவு நடந்தது.
பிரெஞ்சு துணை தூதரக தரப்பில் விசாரித்தபோது, "காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது. தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற 4 ஆயிரத்து 600 பேர் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர்.வாக்கு பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வெளியாகும். " என்று குறிப்பிட்டனர்.