

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைக்க பள்ளிகளை திறந்து வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைபெய்து வருகிறது.
சென்னையில் நேற்று காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை பெய்து வந்தது. ஆனால், நேற்று இரவு
பெய்யத் தொடங்கியபின் விடிய, விடிய பெய்தது.
இன்று காலையும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் விடாது மழை பெய்தது. சென்னையில் அதிகப்பட்சமாக டிஜிபி அலுவலகத்தில் 23 செ.மீ கனமழைபதிவாகி உள்ளது.
சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 507 இடங்களில் மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. சென்னையின் முக்கியமான 3 சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில்,
சென்னையில்மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்குவதற்காக அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை உடனடியாக திறந்துவைக்கவேண்டும். பள்ளிவளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதையும் மின்சாரம் இணைப்பு சரியாக உள்ளதையும் உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.