

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.
தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை பெய்து வந்தது. ஆனால், நேற்று இரவு பெய்யத் தொடங்கியபின் விடிய, விடிய பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் விடாது மழை பெய்து வருவதால் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரியும் நிறைந்து வருகிறது. இந்த ஏரியின் நீர் மட்டம் 21.20 அடியாகும். மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும்.
தொடர் மழை காரணமாக புழல் ஏரியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் தண்ணீர் திறக்கப்படும் அளவும் உயர்த்தப்பட்டு வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
ஏரியில் இருந்து உபரிநீர் கால்வாய் வழியாக திறக்கப்படும் நீரானது செங்குன்றம், சாமியார்மடம், வடகரை, கிரான்ட்லைன், வடபெரும்பாக்கம், கொசப்பூர், மஞ்சம்பாக்கம், மணலி, சடயங்குப்பம் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.