

காஷ்மீரில் பனிச் சரிவில் சிக்கி பலியான ராணுவ வீரர் க.விஜய குமாரின் குடும்பத்தாருக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "காஷ்மீரின் கார்கில் சிகரத்தில் ஏற்பட்ட லேசான நில நடுக்கத்தால் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர், விஜயகுமார் என்பவர் பலியாகி விட்டார்.
மூன்று நாள் தேடுதலுக்குப் பிறகு அவருடைய உடல் பனி கட்டியில் புதைத்திருந்து மீட்கப்பட்டுள்ளார். இந்த செய்திகளைப் படித்து மிகவும் வருந்தினேன்.
கடந்த மாதம் சியாச்சின் சிகரத்தில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி இரண்டு தமிழக வீரர்கள் உட்பட பத்து ராணுவ வீரர்கள் பலியாகி யிருக்கிறார்கள்.
இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது வந்து கொண்டிருப்பதால், இதற்கொரு தீர்வு காண வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
தற்போது மறைந்த தமிழக வீரர் விஜயகுமார் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.