

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 7 பேருக்கு வரும் 30-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல் ராஜ், கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி பள்ளி பாளையம் அருகே கிழக்கு தொட்டிப் பாளையம் என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கொலை செய்யப் பட்டுக் கிடந்தார். அந்த வழக்கில் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை உள்பட 17 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அதில் யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்ற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் யுவராஜ் வேலூர் சிறையிலும் மற்ற 6 பேர் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்ற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 10 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக 1,318 பக்க குற்றப்பத்திரிக்கை நகல் யுவராஜ் உள்ளிட்ட 17 பேருக்கும் இம்மாதம் 3-ம் தேதி வழங்கப்பட்டது. அப்போது 17-ம் தேதி நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டப்பட்டது. அதன்படி நேற்று யுவராஜ் மற்றும் தம்பி தங்கதுரை, ஓட்டுநர் அருண் உள்ளிட்ட 7 பேர், ஜாமீனில் உள்ள 10 பேரும் நாமக்கல் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சம்பத்குமார் யுவராஜ் உள்ளிட்ட 7 பேருக்கும் வரும் 30-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். அப்போது கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக வழங்கப்பட்ட 1,318 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல் ஆங்கிலத்தில் உள்ளது. அதனை தமிழில் மொழி பெயர்த்து வழங்க வேண்டும் என யுவராஜ் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.