Published : 07 Nov 2021 03:06 AM
Last Updated : 07 Nov 2021 03:06 AM

வங்கக் கடலில் நவ.9-ல் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நவ. 11, 12-ல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு: மீனவர்கள் கரை திரும்ப உத்தரவு; முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

வங்கக் கடலில் வரும் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், வட தமிழக கடலோர மாவட்டங்களில் 11, 12-ம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் 9-ம் தேதிக்குள் கரை திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வரும் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும். இதனால், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 9, 10-ம் தேதிகளிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 10, 11, 12-ம் தேதிகளிலும் தமிழக, ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் 11, 12-ம் தேதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.

இதனால், வட கடலோர மாவட் டங்களில் 11, 12-ம் தேதிகளில் சில இடங்களில் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். எனவே, 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல, ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 9-ம் தேதிக்குள் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இன்று (நவ.7) தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். இதேபோல, 9 மற்றும் 10-ம் தேதிகளிலும் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் அவ்வப் போது கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த அக்.31 முதல் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் சூறைக்காற்று வீசியதால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஒரு வாரத்துக்குப் பின்பு நேற்று அதிகாலை ராமேசுவரத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்குச் சென்றன. இவற்றில் சென்ற மீனவர்கள் இன்று காலை கரை திரும்பவுள்ளனர். அதேநேரம் இன்று முதல் அனுமதி டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே வங்கக்கடலில் உரு வாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து துறையினரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்.

l தமிழகத்தில் பல்வேறு அணைகள், ஏரிகளில் நீர் இருப்பு 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. பெய்து வரும் மழையால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே தாழ் வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், ஏரிகள் மற்றும் ஆறுகளின் கரையோரங்களையும் கண்காணித்து பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசுத் துறைகள் செயல்பட வேண்டும்.

l 24 மணிநேரமும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை கண் காணித்து, அதன் நீர் இருப்பு குறித்த விவரங்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

l நவ.9-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கண்காணிப்பு அலுவலர்கள் தங்களது மாவட்டங்களுக்கு சென்று, ஆயத்த பணிகளை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆயத்த பணிகள், மீட்பு நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

l மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும். நிவாரண முகாம்களில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.

l அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

l ஆறுகள், நீர்நிலைகள் நிரம்புவதால், பாலங்கள், சிறுபாலங்கள் மீது வெள்ள நீர் ஓடும் போது, இந்த வழியாக போக்குவரத்தை அனுமதிக்காமல் மாற்றுப் பாதையில் அனு மதிக்க வேண்டும்.

l அணைகள், நீர்த்தேக்கங்களில் இருந்து உபரி நீர் வெளியேற்றுவதை பொதுமக்களுக்கு உரிய வகையில் முன்னறிவிப்பு செய்ய வேண்டும்.

l விவசாய நிலங்களில் தேங்கும் நீரை உடனே வெளியேற்ற வேண்டும்.

l தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

l பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பிளாஸ்டிக் உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு பொதுமக்களுக்கும் உட்கட்டமைப்புகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் அறிவுறுத்தி யுள்ளார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் துரை முருகன், எ.வ.வேலு, தலைமைச்செயலர் வெ.இறையன்பு, டிஜிபி செ.சைலேந்திரபாபு, வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி, அரசு செயலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x