

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம், கால்நடைப் பராமரிப்புத் துறை இணை அமைச்சர்எல். முருகன் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
கரோனாவைக் கட்டுப்படுத்த வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, இத்திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இத்திட்டத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை கோயம்பேட்டில் நேற்று தொடங்கி வைத்தார். கோயம்பேடு அருகில் உள்ள சேமாத்தம்மன் நகர், பிருந்தாவன் நகர், ஸ்ரீஐயப்பா நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று இப்பணிகளை பார்வையிட்டார்.
மாநில பொது சுகாதாரத் துறைஇயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம், பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலர் டாக்டர் மணீஷ், சென்னைபத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் குருபாபு பலராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:
நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றுஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, தடுப்பூசி செலுத்தும் இயக்கம் தமிழகத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 93 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 30 சதவீதம் பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
2-ம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் 60 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளனர். அவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில் உலகிலேயே முதல்நாடாக இந்தியா உள்ளது. இது ஒரு வரலாற்றுச் சாதனை.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கடல் பாசி திட்டம் முதன்முதலாக தமிழகத்துக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மீனவ சகோதரிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு, பொருளாதாரத்தில் அவர்கள் தன்னிறைவு அடையவும் உதவும்.
யூரியா உரம், மருந்துகள் தயாரிப்பதற்கு கடல் பாசியின் தேவை அதிகரித்துள்ளது. ஜப்பான் போன்றநாடுகளில் இதை உணவாகவேபயன்படுத்துகின்றனர். இதில்நிறைய ஊட்டச்சத்து இருப்பதால் வருங்காலத்தில் கடல் பாசி ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கும்.தமிழக அரசு அதற்கான திட்டஅறிக்கையை அனுப்பியதும் கடல்பாசி திட்டம் தொடங்கப்படும்.
மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. புதுச்சேரியில் ரூ.19-ம்,கர்நாடகத்தில் ரூ.13-ம் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.