

உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும், இந்திய அணிக்கான பயிற்சியில் பங்கேற்க கோவில்பட்டி கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி ராமலிங்கம் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் மாரீஸ்வரன்(21). இவர் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு வணிகவியல் படிக்கிறார். உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி பயிற்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாரீஸ்வரனின் தந்தை சக்திவேல் தீப்பெட்டிக்கான அட்டைப்பெட்டி தயாரிக்கும் குடிசைத் தொழில் செய்கிறார். தாய் சங்கரி இதற்கு உதவியாக இருக்கிறார். மாரீஸ்வரன் 8-ம் வகுப்பு படிக்கும்போது விளையாட்டு விடுதி வீரர்களுக்கான தேர்வில் வெற்றிபெற்று, அரியலூரில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி ஹாக்கி பயிற்சியுடன், 12-ம் வகுப்பு வரை படித்தார்.
தற்போது, பயிற்சியாளர் முத்துக்குமாரிடம் ஹாக்கி பயிற்சி பெற்றதுடன், கோவில்பட்டி அரசு கல்லூரியில் படிக்கிறார்.
கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வில், 36 பேரில் ஒருவராக தேர்வுபெற்றார். தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய விளையாட்டு விடுதியில் தங்கி, ஓராண்டாக பயிற்சி பெற்று வருகிறார். அங்கு கடந்த மாதம் நடந்த 2-ம்கட்ட தேர்வில் 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் மாரீஸ்வரனும் ஒருவர் ஆவார்.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழகச் செயலாளர் செ.குரு சித்திர சண்முகபாரதி கூறும்போது, “மாரீஸ்வரன் தற்போது இறுதிக்கட்ட பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் இருந்து 20 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்கள்தான் புவனேஸ்வரில் இம்மாதம் கடைசி வாரம் தொடங்கும் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவர். தற்போது தேர்வு செய்யப்பட்ட 24 பேரில் தென் இந்தியாவில் இருந்து தேர்வானவர் மாரீஸ்வரன் மட்டுமே. தமிழகம் மற்றும் கோவில்பட்டிக்கு மாரீஸ்வரன் பெருமை சேர்த்துள்ளார்” என்றார்.
கனிமொழி எம்பி பாராட்டு
தூத்துக்குடி எம்பி கனிமொழி சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு நேற்று மாரீஸ்வரனை வரவழைத்து பாராட்டினார். சிறப்பாக பயிற்சியில் ஈடுபட வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவருக்கு ஊக்கத்தொகை வழங்கி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெறவுள்ள பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைத்தார். அப்போது ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு தலைவர் சேகர் மனோகரன், துணைச் செயலர்கள் திருமால்வளவன், கிளமென்ட் ஆகியோர் உடன் இருந்தனர்.