

தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கப்படாத 10.63லட்சம் இறந்துபோனவர்களின் பெயர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதால் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
போலி ரேஷன்கார்டுகளை ஒழிக்கவும், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்திலும் தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் 4 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது.
போலி ரேஷன் கார்டுகள் ஓரளவு ஒழிக்கப்பட்டாலும், 4 ஆண்டுகளாக இறந்தவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கப்படவில்லை. இதனால் இறந்தவர்களுக்கும் சேர்த்தே ரேஷன் பொருட்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உணவு வழங்கல்துறை ஆணையரகம் சார்பில் ரேஷன் கார்டுகளில் உள்ளவர்களின் பெயர்கள், ஆதார் எண்களோடு சரிபார்க்கப்பட்டது. இதில் 10,63,583 இறந்த நபர்களுக்கும் சேர்த்து ஒவ்வொரு மாதமும் ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு செய்வது தெரியவந்தது.
இதன்மூலம் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த உணவு வழங்கல்துறை ஆணையரக அதிகாரிகள், ஒவ்வாரு மாவட்டத்திலும் இறந்தவர்களின் பெயர்களை ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்குவதற்கு மாவட்ட ஆட்சியர், வழங்கல்துறை அலுவலர்கள் கள ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப அந்தந்த மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.