

பல் மருத்துவம் படிக்கும் ஆட்டோ ஓட்டுநரின் மகனுக்கு 3-ம் ஆண்டுக் கான கல்லூரிக் கட்டணத்தை செலுத்தி தங்களது மனிதநேயத்தை வெளிப்படுத் தியுள்ளனர் ‘தி இந்து’ வாசகர்கள்.
திருச்சி, மேலக் கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி, வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். தன் வயதான தாய், மனைவி, மகன் சந்தோஷ்குமார், மகள் சினேகா ஆகி யோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் குமார் மதுரையில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவருக்கு ஆண்டுக் கட்டணமான ரூ.2 லட்சத்தில் ரூ.1.15 லட்சத்தை ஆதிதிராவிடர் நலத் துறை செலுத்தி விடுகிறது. மீதமுள்ள தொகை ரூ.85 ஆயிரத்தைச் செலுத்த முடியாமல் சுப்பிரமணி சிரமப்பட்டார். கட்டணம் செலுத்த முடியாததால் தனது மகனின் கல்வி பாதிக்கப்படுமோ என கவலை யடைந்தார். இந்தநிலையில் ‘தி இந்து’ வில் இது தொடர்பான செய்தி டிசம்பர் 2-ம் தேதி வெளியானது.
இதையடுத்து கத்தார் நாட்டில் பணியாற்றி வரும் திருநெல்வேலியைச் சேர்ந்த வாசகர் ஒருவர் இணைய தளத்தில் இந்த செய்தியை படித்துவிட்டு ரூ.60 ஆயிரத்தை கல்லூரிக்கு நேரடி யாகச் செலுத்தி, தனது மனிதநேயத்தை வெளிப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து 3-வது ஆண்டுக் கான கல்விக் கட்டணத்தை மார்ச் 3-ம் தேதிக்குள் செலுத்துமாறு கல்லூரி நிர் வாகம் தகவல் அனுப்பியது. ரூ.35 ஆயிரம் மட்டுமே கையில் உள்ளதால், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த சுப்பிரமணியின் நிலையை அறிந்த திருச்சியைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நல்ல உள்ளம் கொண்ட வாசகர் ரூ.25 ஆயிரமும், திருச்சி இந்தி பிரச்சார சபா அறக்கட்டளை சார்பில் ரூ.25 ஆயிரமும் வழங்கி மாணவர் சந்தோஷ்குமார் தொடர்ந்து படிக்க உதவியுள்ளனர்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணி கூறியபோது, “எப்படி கட்டணத்தை செலுத்தப் போகிறேன் என தவித்து வந்த நிலையில், ‘தி இந்து’வின் உதவியால் நல்ல உள்ளங்கள் மகனின் கல்வியை தொடர உதவி வருகின்றனர். ‘தி இந்து’ வாசகர்களின் மனிதநேயத்துடன் கூடிய இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்” என்றார்.