

சென்னையில் நேற்று மாலை இடியுடன் கூடிய திடீர் மழை பெய்தது. கடும் வெயிலால் பாதிக்கப்பட்டிருந்த சென்னைவாசிகளுக்கு இது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.
கத்திரி வெயில் முடிந்த பிறகும் கடந்த சில நாட்களாக சென்னையை வெயில் வாட்டி எடுத்தது. தென்மேற்கு பருவ மழை தொடங்கிய பிறகும் வெப்பம் குறையாததால் சென்னை மக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை மாலை நான்கு மணியளவில் திடீரென வானம் இருட்டத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.
தாம்பரம், பல்லாவரம், கிண்டி, அடையார், சைதாப் பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், அண்ணா சாலை, சேப்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
எதிர்பாராமல் பெய்த மழையால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் செய்வதறியாமல் தவித்தனர். சனிக்கிழமை மாலை என்பதால், குழந்தைகளுடன் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்தவர்களும் ஷாப்பிங் சென்றவர்களும் மழையில் சிக்கினர். அதே நேரத்தில் வெகு நாட்கள் கழித்து மழை பெய்ததால் சிலர் உற்சாகமாக மழையில் நனைந்துகொண்டே சென்றனர்.
சுமார் அரை மணி நேரம் நீடித்த மழையால், சாலைகளில் நீர் தேங்கியது. நகரத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆலங்கட்டி மழை
கடந்த சில நாட்களாக கத்திரி வெயிலை காட்டிலும் அதிகளவு வெப்பம் நிலவி வந்தது. இதனால், மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், சனிக் கிழமை மதியம் சுமார் ஒருமணி நேரம் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் செங்குன்றம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும் திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழவரம் உள்ளிட்ட பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. பூமி குளிர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேநேரம் மழையால் தாழ்வான இடங்களில் வெள் ளம் சூழ்ந்தது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.