நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை: அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

செங்கை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வாக்குச் சாவடி பட்டியலை ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பெற்று கொண்டனர்.
செங்கை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வாக்குச் சாவடி பட்டியலை ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பெற்று கொண்டனர்.
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, மதுராந்தகம்,மறைமலை நகர் ஆகிய நகராட்சிகள், கருங்குழி, அச்சிறுப்பாக்கம், இடைக்கழிநாடு, மாமல்லபுரம்,திருக்கழுக்குன்றம், திருப்போருர்உள்ளிட்ட பேரூராட்சிகளுக்குக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இதற்கான ஆயத்தப் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் துரிதமாக செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு காஞ்சிபுரம், கடலூர் மாவட்டத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள 7,500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மறைமலை நகர் நகராட்சி சமுதாயக் கூடத்தில் வைக்கப்பட்டு கடந்த மாதம் 27-ம்தேதி முதல் பெங்களுர் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டு முடிவுற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச் சாவடி மைய பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் வெளியிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 நகராட்சி, 6 பேரூராட்சிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் நடைபெறுவதாகவும், வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளதாகவும், தலைவர் பதவிக்கு தேர்தல் முடிந்த பின் மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்றும், மாவட்டத்தில் இரண்டு இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்கு எண்ணிக்கை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உள்ள பகுதியிலேயே நடத்தப்பட வேண்டும். இரண்டு இடத்தில் மட்டும் எண்ணிக்கை நடைபெறும்போது சட்ட ஒழுங்கு பிரச்சினையும், ஆளுங்கட்சியின் இடையூறும் அதிகமாக இருக்கும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகள் சரிவர நடைபெறவில்லை. இறந்தவர்கள் பெயர்கள் சரிவர நீக்கப்படவில்லை. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சரியாக ஆய்வுகள் செய்வதில்லை என்று கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர் அனைத்து புகார்களையும் எழுத்துப்பூர்வமாக உரிய ஆதாரங்களுடன் அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மாதிரி வாக்குப் பதிவை செலுத்தி பரிசோதனை செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in