

வைணவ மகான் திருக்குருகைப் பிரான் பிள்ளானின் 961-வது திரு அவதார மஹோத்ஸவம், காஞ்சிபுரத்தில் வரும் 9-ம் தேதி வரை நடைபெறும் என்று பெருமாள் கோயில் ஸ்ரீதாத தேசிக திருவம்சஸ்தார் சபா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
காஞ்சிபுரம் ஸ்ரீ ரங்கராஜ வீதியில் உள்ள திருக்குருகைப் பிரான் பிள்ளானின் சந்நிதியில், அவரது 961-வது திரு அவதார மஹோத்சவம், கடந்த அக். 31-ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஸ்ரீபிள்ளானின் அவதார தினமான ஐப்பசி மாதம் பூராடம் நட்சத்திர தினம் (09-11-2021) வரை இவ்விழா நடைபெறும்.
பகவத் ராமானுஜரின் மாமாவும், ஆச்சாரியருமான பெரிய திருமலை நம்பிகளின் இரண்டாவது மகனாக அவதரித்தவர் ஸ்ரீபிள்ளான். (குருகேசர் என்றும் அழைக்கப்படுவார்). ஸ்ரீபிள்ளானின் சம்ஸ்கிருத, திராவிட வேத ஞானத்தைப்பாராட்டிய பகவத் ராமானுஜர், அவரை வைணவ சம்பிரதாயத்தின் ஒரே உபய வேதாந்த சிம்மாசனாதிபதியாக நியமித்தார்.
பகவத் ராமானுஜரின் வேண்டுகோளுக்கிணங்க நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்களுக்கு விளக்கவுரை எழுதி, அதை ‘திருவாறாயிரப்படி’ என்ற நூலாக வெளியிட்டார் ஸ்ரீபிள்ளான். அவரது பணியை மெச்சி, நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமான ‘திருக்குருகை’ நாமத்தை, ‘ஸ்ரீபிள்ளான்’ நாமத்துடன் சேர்த்து, ‘திருக்குருகைப் பிரான் பிள்ளான்’ என்ற நாமத்தை சூட்டினார்.
திருக்குருகைப் பிரான் பிள்ளானுக்கு மஹோத்ஸவம் கொண்டாடப்பட வேண்டும் என்ற நோக்கில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர், (ப்லவ வருடம்) ஸ்ரீ அஹோபில மடத்தின் 44-வது பட்டம் ஸ்ரீமத் முக்கூர் அழகிய சிங்கர் அனுக்கிரகத்தில் காஞ்சிபுரத்தில் ராமானுஜ தயாபாத்ர மண்டபத்தில், அவருக்கு சந்நிதி அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வருடமும் திரு அவதார விழா நடைபெற்று வந்தது. பின்னர் ஸ்ரீ ரங்கராஜ வீதியில் திருக்குருகைப் பிரான் பிள்ளானுக்கு புதிய சந்நிதி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வருடம் திருக்குருகைப் பிரான் பிள்ளானின் 961-வது திரு அவதார மஹோத்ஸவம் (16-வது சஷ்டியப்த பூர்த்தி), ஸ்ரீ ரங்கராஜ வீதியில் அமைந்துள்ள அவரது சந்நிதியில் கடந்த அக். 31-ம் தேதி தொடங்கி அவரது அவதார தினமான நவ. 11-ம் தேதி (ப்லவ வருட ஐப்பசி மாதம் பூராடம் நட்சத்திர தினம்) வரை 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
தினமும் வேத, திவ்யபிரபந்த, ஸ்ரீபாஷ்ய பகவத் விஷய க்ரந்த பாராயணங்களுடன் நடைபெறும் இவ்விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு திருக்குருகைப் பிரான் பிள்ளானின் அருளைப் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று பெருமாள் கோயில் ஸ்ரீதாத தேசிக திருவம்சஸ்தார் சபா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.