

வைகை அணையில் நேற்று காலை 66 அடியாக நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது வைகை அணை. 71 அடி உயரம் கொண்ட இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது.
கடந்த சில வாரங்களாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறதுகுறிப்பாக மூல வைகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையினால் வெள்ளம் ஏற்பட்டது.
மேலும் வைகை அணையின் துணை ஆறுகளான கொட்டக்குடி, சுருளியாறு, பாம்பனாறு உள்ளிட்ட பல ஆறுகளில் பெருக்கெடுத்த நீரினால் வைகை அணைக்கு நீர்வரத்து வெகுவாக உயர்ந்தது. மேலும் முல்லை பெரியாறு அணையில் இருந்தும் நீர்வரத்து தொடர்ந்ததால் கடந்த சில நாட்களாக வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.
நேற்று காலை அணைக்கு விநாடிக்கு 4,168 கனஅடி நீர்வரத்து இருந்தது. 969 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் நீர்மட்டம் 66 அடியாக அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. 68.50 அடியில் இரண்டாம் எச்சரிக்கையும், 69 அடியில் 3-வது எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உபரிநீர் அப்படியே வெளியேற்றப்படும்.
இந்த ஆண்டில் ஜனவரி, ஜூன் மாதங்களில் முழுக் கொள்ளளவுக்கு நீர் நிரம்பியது. தற்போது 3-வது முறையாக முழுக் கொள்ளவை எட்டும் நிலை உருவாகி உள்ளது.
அணை கட்டப்பட்ட 64 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே ஒரே ஆண்டில் 2 முறை நீர் நிரம்பியுள்ளது. தற்போது நிரம்பினால் ஒரே ஆண்டில் 3 முறை முழுக் கொள்ளளவை எட்டிய நிலை ஏற்படும்.
பொதுப்பணித்துறையினர் கூறுகையில், முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளிக்கவோ, துவைக்கவோ யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம். ஒரே ஆண்டில் 3-வது முறையாக முழுக் கொள்ளளவை எட்ட உள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றனர்.