

மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த செப்.13-ம் தேதி மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய மற்றும் தனது கணவர் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளமான யூ டியுப்பில் ஆபாசமான வார்த்தைகளால் சித்தரித்து பேசி வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக புகார் அளித்தார்.
அவரது புகார் குறித்து மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் சார்மிங் எஸ்.ஒய்ஸ்லின் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு விசாரணை மேற் கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் தற்போது சென்னையில் திரைப்பட மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணிபுரியும் தேனி மாவட்டம் நாகலாபுரம் மேற்குத் தெருவைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகள் ‘டிக் டாக் ’ சுகந்தியை போலீஸார் நேற்று கைது செய்தனர்.