Published : 06 Nov 2021 07:59 PM
Last Updated : 06 Nov 2021 07:59 PM

தொடர் மழையால் கார்த்திகை விளக்குகள் உற்பத்தி பாதிப்பு: மாற்றுத்திறனாளி மண்பாண்டக் கலைஞர் வேதனை

மதுரை பரவையைச் சேர்ந்த மண்பாண்ட கலைஞர் மாற்றுத்திறனாளி ஆர்.வேல்முருகன் கார்த்திகை திருநாளை முன்னிட்டு விளக்குகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

 மதுரை 

தொடர் மழை காரணமாக கார்த்திகை தீபவிளக்குகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மதுரை, பரவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மண்பாண்டக்கலைஞர் ஆர்.வேல்முருகன் வேதனை தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் பரவையைச் சேர்ந்தவர் மண்பாண்டக் கலைஞர் ஆர்.வேல்முருகன் (35). இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், விஜயலெட்சுமி (7) என்ற மகளும், சித்தார்த் (3) என்ற மகனும் உள்ளனர்.

வேல்முருகன் தனியார் கல்லூரியில் பி.காம் படிக்கும்போது மதுரையில் உள்ள தனியார் மில்லில் வேலை கிடைத்ததால் பட்டப்படிப்பைப் பாதியில் நிறுத்தினார். பின்னர் பணியிலிருந்தபோது இயந்திரத்தில் சிக்கி அவரது வலது கை துண்டானது. இதனால் வேலையிழந்தவர் மனம் தளராமல் சிறு வயதிலிருந்து பார்த்த மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டார். இதில் கிடைக்கும் ஓரளவு வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

சீசனுக்கு ஏற்றவாறு மண்பாண்டங்கள் தயாரித்து விற்பனை செய்யும் மாற்றுத்திறனாளி ஆர்.வேல்முருகன் தற்போது கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி விளக்குகள் தயாரித்து வருகிறார். எனினும் தற்போது பெய்யும் தொடர் மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மண்பாண்டக் கலைஞர் ஆர்.வேல்முருகன் கூறும்போது, ’’கல்லூரியில் பி.காம். படித்தபோது, தனியார் மில்லில் வேலைகிடைத்ததால் பட்டப்படிப்பைப் பாதியில் கைவிட்டேன். கடந்த 2011ல் மில்லில் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் வலது கை துண்டானது. தனியார் மில் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாததால் ஏமாற்றமே மிஞ்சியது. பல இடங்களில் வேலை கேட்டும் கிடைக்கவில்லை. இதனால் மனம் தளராமல் சிறு வயதிலிருந்தே கற்ற தொழிலான மண்பாண்டங்கள் உற்பத்தியில் ஈடுபட்டேன். சொந்த ஊர் மதுரை பெத்தானியாபுரம். தொழிலுக்காகப் பரவையில் வாடகை வீட்டில் வசிக்கிறோம்.

ஆடி மாதம் கஞ்சிக் கலயம், முளைப்பாரி ஓடுகள், தை மாதம் பொங்கல் பானைகள் எனப் பருவத்திற்கேற்றவாறு மண்பாண்டப் பொருட்கள் உற்பத்தி செய்வேன். சாதாரணமாக மண் பானைகள், குருவிப் பானைகள், சிறுவர்கள் சேமிக்கும் உண்டியல், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களான ஆட்டு உரல், அம்மிக்கல் என உற்பத்தி செய்து விற்பனை செய்வோம். தற்போது கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி விளக்குகள், அகல்விளக்குகள், கிளியாஞ்சட்டிகள் உற்பத்தி செய்து வருகிறேன்.

தற்போது தொடர்மழை பெய்து வருவதால் உற்பத்தி செய்ய விளக்குகளைக் காயவைக்க முடியவில்லை. மேலும் காய்ந்த பொருட்களை சுள்ளையில் வைக்க வழியில்லை. இதனால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்களது பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்டப்பொருட்கள் தயாரித்து வருகிறோம். இயற்கைப் பேரிடரால் எங்களது தொழில் பாதிக்கப்படுகிறது. இதனால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு, உற்பத்தி செய்த பொருட்களை பாதுகாக்கும் வகையில் நிழற்கூடம், மற்றும் மண்பாண்டப் பொருட்களைச் சுடுவதற்கும் ஒருகூடம் அமைத்துத் தந்தால் வருவாய் பாதிக்கப்படாது’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x