Published : 06 Nov 2021 07:12 PM
Last Updated : 06 Nov 2021 07:12 PM

கேரளாவைக் கேள்வி கேட்கத் துணிவில்லை: துரைமுருகன் குறித்து செல்லூர் ராஜூ விமர்சனம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசைக் கேள்வி கேட்கத் துணிவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் குறித்து செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இருப்பினும் அணை குறித்த பல்வேறு சர்ச்சைகளைக் கூறி கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் 2014, 2015, 2018 என்று மூன்று முறை மட்டுமே 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டது.

இதற்கிடையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்து நீர்மட்டம் 138.70 அடியாக உயர்ந்தது. அணையின் பலம் குறித்து சர்ச்சையைக் கிளப்பிய கேரளா கடந்த 29-ம் தேதி தங்கள் மாநிலத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிட்டது. நீர்திறப்பு உரிமை தமிழகத்திடம் உள்ள நிலையில் கேரளாவின் தன்னிச்சையான போக்கு குறித்து தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஐந்து மாவட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினர். அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’முல்லைப் பெரியாறு அணை குறித்துப் பேசுவதற்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தார்மீக உரிமை கிடையாது. இரண்டு பேரும் மாறிமாறிப் பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருந்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் அந்தத் துறை அமைச்சர்கள் ஒருவர் கூட இந்த அணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்யவில்லை’’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்‌ கடும் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’4 முறை நான்‌ முல்லைப்‌ பெரியாறு அணைப்‌ பகுதிக்குச்‌ சென்று தண்ணீரைப் பாசனத்திற்காகத் திறந்துவிட்டு ஆய்வு செய்திருக்கிறேன்‌. என்னுடைய வாழ்க்கையே முல்லைப்‌ பெரியாறு அணையுடன்‌ பின்னிப் பிணைந்த ஒன்றாகும்’’ என்று தெரிவித்தார்‌.

இந்நிலையில் இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். அப்போது அவர் கூறும்போது, ’’அமைச்சர் துரைமுருகன் காமெடி செய்திருக்கிறார். அவரால் கேரள அரசைக் கண்டிக்க முடியவில்லை. அவர்களைக் கேள்வி கேட்கத் துணிவில்லை. இவர்களால் முல்லைப்‌ பெரியாறு அணையின் மொத்த நீராதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் தன்னிலை மறந்து காழ்ப்புணர்ச்சியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை வசை பாடி இருக்கிறார். முல்லைப் பெரியாறு அணை குறித்துப் பேச திமுகவிற்கு உரிமை கிடையாது. திமுக அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு மட்டும் ஆபத்தை உருவாக்கவில்லை.

இதேபோன்ற ஒரு சூழ்நிலை காவிரி ஆற்றுப் பிரச்சினைக்கும் வரும். அதேபோலக் கபினி அணையில் இதே போன்ற பிரச்சினை எழும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x