குமரியில் கும்பப்பூ சாகுபடி மும்முரம்: 3500 ஹெக்டேர் வயலில் நடவுப் பணி நிறைவு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் நெல் நடவுப் பணிக்காக வயல்களைப் பண்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது | படம்: எல்.மோகன்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் நெல் நடவுப் பணிக்காக வயல்களைப் பண்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது | படம்: எல்.மோகன்.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை குறைந்துள்ள நிலையில் கும்பப்பூ சாகுபடி மும்முரமாக நடந்து வருகிறது. 3500 ஹெக்டேர் வயல் பரப்பில் நாற்றங்கால் நடவுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் 3000 ஹெக்டேரில் சாகுபடிப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

குமரி முழுவதும் கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவு வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டு பெய்துள்ளது. மழையால் மலையோர கிராமச் சாலைகள், தடுப்பணைகள், இணைப்புப் பாலங்கள், பாசனக் கால்வாய் ஓரங்கள், சாலைகள் போன்றவை சேதமடைந்தன. மாவட்டம் முழுவதும் 4 உயிரிழப்புகள் ஏற்பட்டன. மழையின்போது சூறைக்காற்று இல்லாததால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

அதேநேரம் குமரி மாவட்ட நீர் ஆதாரங்களான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உட்பட அனைத்து அணைகளும், குளங்களும் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன. மழையால் கும்பப்பூ நெல் சாகுபடி பாதிக்கப்பட்டிருந்தாலும், மழை நின்ற நாட்களில் நாற்றங்கால் நடவுப் பணிகள் தீவிரமாக நடந்தன.

தற்போதும் மழையின் வேகம் குறைந்திருப்பதால் கும்பப்பூ சாகுபடி பணி மும்முரமாக நடந்து வருகிறது. நட்டு 155 நாட்களில் அறுவடைப் பருவத்தை எட்டும் பொன்மணி நெல்ரகப் பயிர்கள் தற்போது நடவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 6500 ஹெக்டேர் வயல் பரப்புகளில் இதுவரை 3500 ஹெக்டேருக்கு மேல் நாற்றங்கால் நடவுப் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள 3,000 ஹெக்டேர் வயல் பரப்புகளில் நாற்றங்கால் நடும் பணிக்காக வயலை உழுது பண்படுத்தி, சீரமைக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடக்கத்தில் யூரியா உரத் தட்டுப்பாடு நிலவியதாக புகார் எழுந்த நிலையில் தற்போது மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் யூரியா தட்டுப்பாடின்றிக் கிடைக்கும் வகையில் வேளாண்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நடவு செய்யப்படும் நெல் நாற்றங்காலுக்கு வேப்பம் புண்ணாக்குடன் யூரியா கலந்து உரம் விடுவதால் வேப்பம் புண்ணாக்கிற்கும் தேவை அதிகரித்துள்ளது.

திருப்பதிசாரம், இறச்சகுளம், பூதப்பாண்டி, தெரிசனங்கோப்பு, சுசீந்திரம், பெரியகுளம் போன்ற பகுதிகளில் நெல் நடவுப் பணிகள் முடிந்துள்ள நிலையில் வேம்பனூர், இரணியல், நெல்லிகுளம், மற்றும் கடைமடைப் பகுதிகளான அஞ்சுகிராமம், வழுக்கம்பாறை போன்ற பகுதிகளில் நெல் சாகுபடிப் பணிகள் நடந்து வருகின்றன. நவம்பர் மாத இறுதிக்குள் கும்பப்பூ சாகுபடிப் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என விவசாயிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடின்றி இருப்பதால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வேளாண் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், நெல் கொள்முதல் ஈரப்பதக் கட்டுப்பாட்டில் அரசு தளர்வுகளை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in