

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி இன்று (06.11.2021) வெளியிட்டார்.
இதுகுறித்துச் சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
’’தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை, மாவட்டத் தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி இன்று (06.11.2021) ரிப்பன் மாளிகையில் வெளியிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள சாதாரண உள்ளாட்சித் தேர்தலில் 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஆண் வாக்காளர்களுக்காக 278 வாக்குச் சாவடிகள், பெண் வாக்காளர்களுக்காக 278 வாக்குச் சாவடிகள் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 5,266 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 5,822 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன
மேற்படி, வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் 1 முதல் 15 வரை மற்றும் 200 வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் வாக்களிக்கவிருக்கும் வாக்குச்சாவடி குறித்த விவரத்தைச் சரிபார்த்துக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில், துணை ஆணையாளர்கள் விஷூ மஹாஜன் (வருவாய் (ம) நிதி), எஸ்.மனிஷ் (சுகாதாரம்), மாநகர வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி பாபு உட்படப் பலர் கலந்து கொண்டனர்’’.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.