Published : 18 Jun 2014 09:21 AM
Last Updated : 18 Jun 2014 09:21 AM

கூடா நட்பால் பதவி இழந்த ஆசிக் மீரா: திருச்சி அடுத்த துணை மேயர் யார்?

மாநகர துணை மேயராக இருந்த ஆசிக் மீரா பதவி பறிக்கப்பட அவரது நண்பர்களுக்கு மிகப் பெரிய பங்கு இருப்பதாக கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

மறைந்த தமிழக அமைச்சர் மரியம் பிச்சைக்கு 3 மனைவிகள். முதல் மனைவியின் ஒரே மகன்தான் ஆசிக் மீரா. இவருடைய தாய் உடல்நலம் குறைவால் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார்.

2-வது மனைவி புற்றுநோய் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் ரஷ்யாவில் மருத்துவம் படிக்கிறார். மற்றொருவர் திருச்சியில் பிளஸ் 2 முடித்துள்ளார். மரியம் பிச்சையின் மரணத்துக்குப் பிறகு இவர்கள் இருவரும் வீட்டைவிட்டு விரட்டப்பட்டுள்ளனர். உள்ளூரில் உள்ள பையன் மட்டும் அவர்களது சித்தி வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

மரியம் பிச்சையின் 3-வது மனைவி கஸ்தூரிக்கு குழந்தைகள் இல்லை. மரியம் பிச்சை சடலம் வீட்டில் இருக்கும்போதே கஸ்தூரியை, ஆசிக் மற்றும் அவரது நண்பர்கள் அடித்து விரட்டினராம். அவருக்கு பலவித இடையூறுகள் செய்ததுடன் திரையரங்கம் ஒன்றை வாடகைக்கு எடுத்து பிழைப்பு நடத்த கஸ்தூரி செய்த முயற்சிக்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளார் ஆசிக் என்கிறார்கள்.

கஸ்தூரியை 3 ஆண்டுகளாக போனிலும் நேரிலும் ஆசிக் நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் சிலர் இன்னமும் மிரட்டி வருகிறார்களாம். அவரும் காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், முதல்வரின் தனிப் பிரிவு எனப் பலதரப்பட்ட நபர்களுக்கு புகார் செய்து ஓய்ந்துவிட்டார். கஸ்தூரியுடன் மோதலில் ஈடுபட்டபோதே ஆசிக் பதவிக்கு ஆபத்து என்கிற நிலை உருவாகியது.

கஸ்தூரியின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், ஆசிக் தரப்பினருக்கு இன்னமும் துணிச்சல் கூடியது. தனது குழந்தைக்கு தகப்பன் யார் என்பதை ஊருக்கு தெரியப்படுத்துவதற்காக நியாயம் கேட்டு போராடிய துர்கேஸ்வரியையும் மிரட்டவும் சங்கடப்படுத்தவும் ஆரம்பித்தனர்.

இறுதியில் துர்கேஸ்வரி, ஆசிக் மீது வழக்கு பதிவு செய்யாதவரை காவல் நிலையத்திலேயே தங்கப் போவதாகக் கூறி அவரது வழக்கறிஞர் பானுமதியுடன் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து தனது போராட்டத்தை துர்கேஸ்வரி தீவிரப்படுத்தவே, ஆசிக்கின் பதவியைப் பறிக்கும் முடிவுக்கு வந்தது அதிமுக மேலிடம்.

ஆசிக் மீரா இளம்வயதில் மாநகர துணை மேயர் என்கிற மிகப் பெரிய பொறுப்புக்கு வந்த பிறகு அதை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சிகளை எடுக்கவே இல்லை என்கிறார்கள் அவருக்கு வேண்டிய சில நண்பர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வார்டுக்கு உள்பட்ட ஒரு பிரபல தேநீர் கடையை காலி செய்யும் விவகாரத்தில் நேரில் சென்று அநாகரிகமாக நடந்துகொண்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதேபோல் அவரது வார்டில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்ந்தது. அதில் பயின்ற அனைவரும் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதால் அவர்களுக்கு பரிசளிப்பு, பாராட்டு விழாக்களை அப்பகுதியில் உள்ள கல்விக் குழுவினர் செய்தனர். அவர்களை அப்படியொரு நிகழ்ச்சியை நடத்தவிடாதபடி இடையூறு செய்தார் ஆசிக் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வாய்ப்பு யாருக்கு?

ஆசிக் மீரா பதவி விலகியதால் திருச்சி மாநகராட்சியின் அடுத்த துணை மேயராகும் வாய்ப்பு யாருக்கு என கிரிக்கெட் சூதாட்டத்துக்கு பணம் கட்டாத குறையாக பலர் பந்தயம் வைக்கின்றனர். மாநகராட்சியின் 3 கோட்டத் தலைவர்கள் பெயர் இதில் அடிபடுகிறது. மாநகரச் செயலரும் அரசு தலைமைக் கொறடாவின் ஆதரவாளருமான மாநகராட்சி உறுப்பினர்களில் சீனியரான ஒருவர், மக்களவை உறுப்பினர் குமாரின் ஆதரவாளரான இன்னொரு கோட்டத் தலைவர், தமிழக நிதியமைச்சர் ஓபிஎஸ் உறவினர் ஒருவர் என பலரது பெயர்கள் அடிபடுகின்றன.

இதில் சீனியர் கோட்டத் தலைவர் மீது காவல்நிலையத்தில் மோசடி வழக்கு உள்ளது. மற்றொரு கோட்டத் தலைவர் சாதி பாகுபாட்டுடன் மக்களை அணுகக் கூடியவர் என்கிற தகவல்கள் ஆளுங்கட்சி மேலிடத்துக்கு புகாராகப் போயுள்ளதாம். இதனால் இவர்கள் அல்லாத ஒருவர் பதவிக்கு வரலாம் என்கிற பேச்சு இருக்கிறது.

இந்நிலையில் பதவி விலகியவர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கட்சியில் சீனியராகவும் சிறுபான்மை கவுன்சிலராகவும் இருக்கும் ஒருவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் தகவல்கள் உலா வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x