

அனைத்து கிராமங்கள், நகரங்களில் வீடு வீடாகச் சென்று கரோனாதடுப்பூசி செலுத்தும் பணியை நவம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசுதீவிரமாக செயல்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக, கிராமங்களில் வீடுதோறும் சென்று நேரடியாக தடுப்பூசி வழங்கும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 2-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
இத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரைந்து விரிவுபடுத்தும் பொருட்டு அனைத்து மாவட்டஇணை சுகாதார இயக்குநர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. கிராமப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட அனைவருக்கும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்குவதற்கான செயல்திட்டத்தை பகுதி மருத்துவ அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்காளர் பட்டியலைப் பெற்று அதன் மூலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு மருத்துவர், தடுப்பூசி செலுத்துபவர், தகவல் பதிவு செய்பவர், இரு பணியாளர்கள் இடம்பெற வேண்டும்.
அவர்கள் நாள்தோறும் மக்களின் வீடுகளைத் தேடிச் சென்று கணக்கெடுப்பு நடத்தி, தடுப்பூசி செலுத்த வேண்டும். அதுகுறித்த விவரங்களை தினமும் சுகாதாரத்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை நவம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிதாக 875 பேருக்கு தொற்று
இதற்கிடையே, தமிழகத்தில் நேற்று ஆண்கள் 522, பெண்கள்353 என மொத்தம் 875 பேருக்குகரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 106,கோவையில் 102 பேர் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 10,745 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 13 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,204 ஆகஉயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,561 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.