

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 9-ம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 6-ம் தேதி (இன்று)நீலகிரி, கோவை, ஈரோடு,சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
7-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும்.
வெள்ளிக்கிழமை காலை8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில்8 செ.மீ., மதுரை மாவட்டம் பேரையூர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சேலம், கடலூர் மாவட்டம் பெலாந்துறை ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கம், மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.