

தீபாவளிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது நவீன தீண்டாமை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயி லுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி நேற்று சாமி தரிசனம் செய்தார். அங்கு 2013-ம் ஆண்டில் ஏற்பட்டவெள்ளத்தின்போது சேதமடைந்து சீரமைக்கப்பட்ட 12 அடி உயர ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நேரலை மூலம் ஒளிபரப்பப்பட்டது.
இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: நேற்று இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்தும் இந்துக்கள், தமிழர்கள் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டக் கூடிய தீபாவளி பண்டிகையை கொண்டாடினோம். அப்படிப்பட்ட விழாவுக்கு தமிழக முதல்வர் வாழ்த்துதெரிவிக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது.
பிற மதத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்வது,பெரும்பான்மையான இந்து சமுதாயத்தினர் கொண்டாடுகின்ற தீபாவளி திருவிழாவுக்கு வாழ்த்து சொல்லாமல் புறக்கணிப்பதை நவீன தீண்டாமையாக பார்க்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.10-ம் வரியை குறைத்திருக்கிறார். அது போல பாஜக ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் வாட் வரியை குறைத்துள்ளனர். தமிழக அரசும் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை குறைக்க வேண்டும் என்றார்.