

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவ.8-ம் தேதிதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர், தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர்மட்டம் 136 அடி இருக்கும்போதே, கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீரை திறந்துவிட்டுள்ளது. அணையில் 142 அடி வரை நீரை தேக்கிவைக்காதது ஏன் என பலமுறை கேட்டும், தமிழக அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
எனவே, முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக நவ.8-ம் தேதி காலை 10 மணிக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். தமிழகத்தில் 100 நாள்வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.246.13 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. ஆனால், 100 நாள்வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மத்திய அரசு போதுமான நிதிஒதுக்கவில்லை என தமிழக அரசுகூறுகிறது. இது முற்றிலும் தவறானது. இந்தியாவிலேயே அதிகமாக கடன் உள்ள மாநிலமாக தமிழகம் மாறப் போகிறது. நிதிநிலை கவலைக்கிடமாக இருப்பதால், இதுகுறித்து முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.