Published : 05 Nov 2021 08:00 PM
Last Updated : 05 Nov 2021 08:00 PM

தமிழகத்தில் அமையவுள்ள கடற்பாசி பூங்கா மீனவப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்: அமைச்சர் எல் முருகன் நம்பிக்கை

மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள கடற்பாசி சிறப்பு பூங்கா மூலம் மீனவ மகளிருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு சிறந்த வாய்ப்பு உருவாகும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல் முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர் அங்கு புனரமைக்கப்பட்ட ஆதிசங்கரர் நினைவிடத்தையும் அவரது முழுஉருவ சிலையையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சி இந்தியாவில் உள்ள பன்னிரு ஜோதிலிங்க தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியை இந்தக் கோவிலிலிருந்து கண்டுகளித்தார்.

பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் அமைச்சர் வழிபாடு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல் முருகன், நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற செய்தி இதன் மூலம் பிரபலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் கடற்பாசி சிறப்பு பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறிய அவர், இந்த பூங்காவை எந்த கடலோரப் பகுதியில் அமைப்பது என்று ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

இந்த கடற்பாசி பூங்கா மூலம் மீனவ மகளிருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்பாக அமையவுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

பின்னர் ராமேஸ்வரத்தில் இன்று பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொண்ட மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் அரசு விருந்தினர் மாளிகையில் மீனவ பிரதிநிதிகளை சந்தித்தார்.

பின்னர் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மீனவ சங்கத் தலைவர்கள், மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான மானியத்தை உயர்த்தி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு அமைச்சர் இது தொடர்பாக கொச்சி படகுகட்டும் தளத்தில் அறிக்கை கேட்டுள்ளதாகவும், அதன்பிறகு தொகை உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x