

தீபாவளி தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மலைச்சாலையில் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதமான தட்ப வெப்பநிலையைச் சுற்றுலாப் பயணிகள் கண்டும், உணர்ந்தும் ரசித்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வார விடுமுறையுடன் சேர்ந்து நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி முடித்த மக்கள், கொடைக்கானல் நோக்கி வரத் தொடங்கிவிட்டனர். இன்று காலை முதலே மலைச்சாலையில் கொடைக்கானல் நோக்கி வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சென்றன.
இதனால் கொடைக்கானலின் நுழைவு வாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெள்ளி நீர்வீழ்ச்சிப் பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிறிது சிறிதாக நகர்ந்து கொடைக்கானல் நோக்கிச் சென்றன. ஒரே நாளில் கொடைக்கானலைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடலாம் என்று நினைத்து கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகள், போக்குவரத்து நெரிசலால் ஒரே இடத்தில் வாகனங்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்றதால் சுற்றுலாத் தலங்கள் முழுவதையும் சுற்றிப் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு கொடைக்கானல் சென்றடைந்த சுற்றுலாப் பயணிகள், பிரையண்ட் பூங்கா, ரோஸ் கார்டன், தூண்பாறை, மோயர் பாய்ண்ட், குணா குகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் குவிந்தனர்.
கொடைக்கானலில் இன்று அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்தது. அதிகபட்சமாகப் பகலில் 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக இரவில் 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவியது. இதனால் இரவில் குளிர் காணப்பட்டது. காற்றில் 87 சதவீதம் ஈரப்பதம் இருந்தது. மூன்று கிலோ மீட்டர் வேகத்தில் இதமான குளிர்க்காற்றும் வீசியது. மேகக்கூட்டங்கள் இறங்கி வந்து சுற்றுலாப் பயணிகளைத் தழுவிச் சென்றது. சுற்றுலாப் பயணிகள் இதமான தட்பவெப்பநிலையைக் கண்டும், உணர்ந்தும் ரசித்தனர்.