பிரெஞ்சு கவுன்சிலர் தேர்தல் புதுச்சேரியில் 7-ம் தேதி நடக்கிறது: பிரெஞ்சு தூதரகத்தில் ஏற்பாடு

பிரெஞ்சு கவுன்சிலர் தேர்தல் புதுச்சேரியில் 7-ம் தேதி நடக்கிறது: பிரெஞ்சு தூதரகத்தில் ஏற்பாடு
Updated on
1 min read

பிரெஞ்சு கவுன்சிலர் தேர்தல் வரும் 7-ம் தேதி நடப்பதால், புதுச்சேரியில் பிரெஞ்சு தூதரகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாடு வாழ் பிரெஞ்சு குடிமக்களுக்காக பிரெஞ்சு குடிமக்கள் சபையை பிரான்ஸ் நாடு ஏற்படுத்தியுள்ளது. அந்தந்த நாடுகளில் உள்ள பிரெஞ்சு துணைத் தூதரகங்கள் தேர்தல் நடத்தி இந்தச் சபைக்கான பிரெஞ்சு கவுன்சிலர்களைத் தேர்வு செய்கின்றன. இவர்களின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள். கவுன்சிலர்கள் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் குறைகளை நேரடியாக பிரெஞ்சு துணைத் தூதரகத்திற்குக் கொண்டுசென்று தீர்வு காண முயல்கின்றனர்.

இந்தியாவில் பிரெஞ்சு கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுக்க வசதியாக வட மாநிலங்கள் தென் மாநிலங்கள் என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வடமாநிலத் தொகுதியில் நான்கு கவுன்சிலர்களும் தென்மாநிலத் தொகுதியில் மூன்று கவுன்சிலர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தென்மாநிலத் தொகுதியில் புதுவை, தமிழகம், கேரளா, ஆரோவில், அந்தமான் தீவுகளில் வசிப்போர் அடங்குவர். இரு தொகுதிகளுக்குக் கடைசியாக 2014-ல் கவுன்சிலர் தேர்தல் நடந்தது. இவர்களின் பதவிக் காலம் 2020-ல் முடிந்தது. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளிலும் கவுன்சிலர் தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது.

இந்தியத் தொகுதியில் மே மாதம் கரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் தேர்தல் நடக்கவில்லை. தள்ளி வைக்கப்பட்ட இந்திய பிரெஞ்சு கவுன்சிலர் தேர்தல் வரும் 7-ம் தேதி காலை 8 முதல் மாலை 6 மணி வரை நடக்க உள்ளது. அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும். தேர்தலுக்கான ஏற்பாடுகளைப் புதுவையில் பிரெஞ்சு துணைத் தூதரகம் செய்து வருகிறது. இத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற 4 ஆயிரத்து 600 பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in