ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வார யார் காரணம்?- வாக்குகளை வளைக்க வரிந்துகட்டும் கட்சிகள்

ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வார யார் காரணம்?- வாக்குகளை வளைக்க வரிந்துகட்டும் கட்சிகள்
Updated on
2 min read

ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் விவகாரத்தை கையில் எடுத்து ஆதரவு திரட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.

தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசனத்தின் உயிர்நாடியாக ஸ்ரீவைகுண்டம் அணை விளங்குகிறது. கடந்த 1873-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த அணை 142 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை.

இதனால் மழைக் காலங்களில் ஆற்றில் வரும் மிகைப்படியான தண்ணீர் சேமித்து வைக்க வழியின்றி, வீணாக கடலில் கலக்கிறது. எனவே, ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார வேண்டும் என்பது தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

தூர்வாரும் பணி

கடந்த சில தேர்தல்களில் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார வேண்டும் என்பதை விவசாயிகள் பிரதான கோரிக்கையாக முன்வைத்தனர். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினரும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அணை நிச்சயம் தூர்வாரப்படும் என வாக்குறுதி அளித்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழைக்கு முன் தூர்வார வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறவில்லை. பல்வேறு தடைகளைக் கடந்து அணையை தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த பணி முடிவுடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலில் எதிரொலிக்கும்

அணை தூர்வாரும் பணி தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த போதிலும், தூர்வாரும் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், மணல் கொள்ளையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பணி நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் விவகாரம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதியில் அணை தூர்வாரும் விவகாரம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

திமுக திட்டம்

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து அணை தூர்வாரும் பணி தொடங்க காரணமாக இருந்தவர் எஸ்.ஜோயல். இவர் மதிமுக மாவட்ட செயலாளராக இருந்தபோது இந்த வழக்கை தொடர்ந்தார். தற்போது திமுகவில் இணைந்துவிட்டார். எனவே, இந்த பிரச்சினையில் திமுக உரிமை கோர வாய்ப்புள்ளது. மேலும், அணை தூர்வாருவது தொடர்பாக திமுக சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பல போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. எனவே, அணை தூர்வாரப்படுவதற்கு திமுகவே காரணம் என அவர்கள் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது.

மதிமுக, சிபிஐ

அதேநேரத்தில் ஜோயல் தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி வாதிட்டார். மேலும், ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார வலியுறுத்தி போராட்டத்தையும் அறிவித்தார். அவரது அறிவிப்பு வந்த பிறகே அணை தூர்வாரும் பணி தொடங்கியது. மேலும், தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவும் அணை தூர்வாரும் விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பல போராட்டங்களையும் அவர் நடத்தியுள்ளார். எனவே, மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்திலும், ஸ்ரீவைகுண்டம் அணை விவகாரம் முக்கியமான இடத்தை பெறும் என, அக்கூட்டணியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

முதல்வர் நடவடிக்கை

ஆளும்கட்சியை பொறுத்தவரை, கடந்த 142 ஆண்டுகளாக தூர்வாரப்படாத ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரும் பணி அதிமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டுள்ளது. அணையை தூர்வார முதல்வர் ஜெயலலிதா தான் நடவடிக்கை எடுத்துள்ளார் எனக் கூறி வருகின்றனர்.

இதேபோல் காங்கிரஸ், தமாகா, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளன. எனவே, அவர்களது தேர்தல் பிரச்சாரத்திலும் ஸ்ரீவைகுண்டம் அணை முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மொத்தத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் விவகாரம் எதிரொலிக்கும் என்பது உறுதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in