Published : 05 Nov 2021 01:51 PM
Last Updated : 05 Nov 2021 01:51 PM

எல்லா இட ஒதுக்கீட்டுக்கும் ஆபத்து; தமிழகத்தில் சமூக நீதியை நாம்தான் மீண்டும் நிலைநிறுத்தப் போகிறோம்: ராமதாஸ்

சென்னை

எல்லா இட ஒதுக்கீட்டுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் சமூக நீதியை நாம்தான் மீண்டும் நிலைநிறுத்தப் போகிறோம் எனவும் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்துப் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள கடிதம்:

''தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீடு சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருப்பது, அந்த இட ஒதுக்கீட்டைத் தங்களின் முன்னேற்றத்திற்காக நம்பியிருந்த பாட்டாளி மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு தரப்பினர் அதைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மை என்பது, ஒட்டுமொத்தத் தமிழகத்தின் சமூக நீதிக்கும் இதுகுறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு உலை வைத்திருக்கிறது என்பதுதான்.

வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள 10.50% இட ஒதுக்கீட்டைச் செல்லாது என்று அறிவிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ள 7 வினாக்களையும், அவற்றின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பில் விவரித்துள்ள அம்சங்களையும், எந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக முன்வைத்தாலும், அந்த இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க முடியாது என்பதுதான் உண்மை. இப்படிக் கூறுவதால் அந்த வினாக்கள் நுணுக்கமான, கூர்மையான சட்ட ஆயுதங்கள் அல்ல. மாறாக, அவை அனைத்தும் கடந்த காலங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டு, விடை காணப்பட்டவைதான். சென்னை உயர் நீதிமன்றத்தில் அவற்றுக்கு முன்வைக்கப்பட்ட விடைகள் அனைத்தையும் ஆய்வுக்குக் கூட எடுத்துக்கொள்ளாமல், வினாக்களை மட்டும் முன்னிறுத்தி, அவற்றை மட்டுமே பிரம்மாண்டப்படுத்தி சமூக நீதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் மீண்டும், மீண்டும் சொல்கிறேன்... இந்த வினாக்கள் நீதி வழங்குவதற்காக எழுப்பப்பட்ட வினாக்கள் அல்ல... மாறாக, தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு முடிவு கட்டுவதற்காக முன்வைக்கப்பட்டவை.

இந்தியாவில் தமிழ்நாடுதான் சமூக நீதியின் தொட்டில் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், சமூக நீதிக்கு எதிரான சக்திகளும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் இருக்கின்றன. அந்த சக்திகளுக்கு ஆரம்பத்தில் வெற்றி கிடைப்பதுபோலத் தோன்றினாலும் இறுதியில் நீதிமன்றங்களும், சட்டமியற்றும் மன்றங்களும் இணைந்து அந்த சக்திகளுக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கின்றன. 1950, 1994 எனத் தமிழ்நாட்டின் கடந்த கால வரலாற்றைச் சீர்தூக்கிப் பார்த்தவர்களுக்கு இந்த உண்மை நன்றாகப் புரியும். அதேபோன்ற ஒரு சமூக நீதி நெருக்கடிதான் தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டிருக்கிறது. இதுவும் முறியடிக்கப்படும்.

சமூக நீதிக்கு எதிரானவர்கள் எதையெல்லாம் கூறினார்களோ, சமூக நீதிக்கு எதிரான சக்திகள் என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்தார்களோ, அவைதான் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆணையில் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 3.50% உள் ஒதுக்கீட்டைச் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அருந்ததியர்களுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள 1994-ம் ஆண்டின் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்தித்தான் இத்தகைய உள் ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றமும் கூறவில்லை. உச்ச நீதிமன்றமும் ஒருபோதும் கூறவில்லை.

ஆனால், 1994-ம் ஆண்டின் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் செய்து, அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் உள் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த நிலைப்பாடு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சக்திகளின் நிலைப்பாடு. அதே நிலைப்பாட்டை சென்னை உயர் நீதிமன்றமும் எடுத்திருப்பதால் இஸ்லாமியர்கள் மற்றும் அருந்ததியர்களின் உள் ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக 1994-ம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கு 16 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு 2010ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. 69% இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அதற்கான புள்ளிவிவரங்களை ஓராண்டில் தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்டது. அதன்படி தமிழக அரசும் அம்பாசங்கர் ஆணைய அறிக்கை அடிப்படையிலான புள்ளிவிவரங்களைத் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டது. ஆனால், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான மக்கள்தொகை விவரங்களே இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. இது அந்த இட ஒதுக்கீட்டையும் ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் 1980-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீடுகளுக்கும் ஆதாரம் அம்பாசங்கர் ஆணைய அறிக்கைதான். ஆனால், அதைச் செல்லாததாக்க சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு முயல்கிறது. இதுதான் ஒட்டுமொத்த சமூக நீதிக்கும் ஆபத்தானது.

வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்தவர்களில் முதன்மையானவர்கள் இந்த இட ஒதுக்கீட்டால் எந்த வகையிலும் பாதிக்கப்படாதவர்கள். வன்னியர்களின் இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள், அடுத்தகட்டமாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். இப்போது வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்காக மகிழ்ச்சியடைபவர்கள், அடுத்து தங்களுக்கு ஏற்படப்போகும் சமூக அநீதியை உணராதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் நாம்தான் சாதித்துக் கொடுத்தாக வேண்டும்.

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு விடக்கூடாது என்பது இன்று பலரின் விருப்பமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஏற்படுத்தியதே நாம்தான். அதற்காக நாம் இழந்தவை 21 உயிர்கள் உட்பட ஏராளம்; நாம் செய்த தியாகங்கள் ஏராளம், ஏராளம். தென்னிந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு, கேரளத்தில் 8 பிரிவுகளாகவும், கர்நாடகத்தில் 6 பிரிவுகளாகவும், ஆந்திரத்தில் 5 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் விடுதலைக்குப் பின்னர் 42 ஆண்டுகள் வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஒரே பிரிவாகத்தான் இருந்தது. பிற்படுத்தப்பட்டோருக்குத் தொகுப்பு முறையில் இட ஒதுக்கீடு வழங்க எந்த அமைப்பும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவைப் போராடிப் பெற்றுக் கொடுத்ததும் நாம்தான். இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் உள் இட ஒதுக்கீட்டைக் கிடைக்கச் செய்ததும் நாம்தான். வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்ததும் நாம்தான். தமிழகத்தில் சமூக நீதியின் முன்னோடி நாம்தான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

சமூக நீதியைப் பாதுகாப்பதற்காக அடுத்தகட்ட சட்டம் மற்றும் அரசியல் போருக்கு ஆயத்தமாக வேண்டிய தருணம் நமக்கு வந்திருக்கிறது. அதற்குப் பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். சமூக நீதிக்கு எதிரான சக்திகள் தோண்டிய பள்ளத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மட்டும் வீழ்த்தப்படவில்லை... எல்லா இட ஒதுக்கீடுகளும் வீழ்ச்சியின் விளிம்பில்தான் உள்ளன.

கடந்த காலங்களைப் போலவே தமிழகத்தின் வன்னியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான சமூக நீதியையும் நாம்தான் நிலைநிறுத்தப் போகிறோம். தமிழ்நாட்டில் நான்கு வகையான இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்த நம்மால்தான் இது சாத்தியமாகும். அதனால், வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து எவரும் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x