

பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக பதிவிட்டு வரும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா சர்மாவிடம் பாஜக புகார் அளித்துள்ளது.
பாஜக மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேஷ், கலை, கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம், செய்தித் தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லியில் தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மாவை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
பாஜக நிர்வாகி கல்யாணராமன் கைது செய்யப்பட்டபோது அங்கு சென்ற மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேஷை காவல் துறையினர் தாக்கினர். பாஜக கலை, கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் பற்றி சமூக ஊடகங்களில் திமுகவினர் தரக்குறைவாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையத் தலைவரிடம் நேரில் புகார் அளித்துள்ளோம். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா சர்மா உறுதி அளித்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.