வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் தனி கவனம் செலுத்த வேண்டும்: அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவுறுத்தல்

வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் தனி கவனம் செலுத்த வேண்டும்: அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவுறுத்தல்
Updated on
1 min read

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் தனி கவனம் செலுத்தவேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்தல் ஆணையம் சார்பாக ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், திருத்தவும் வரும் 30-ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களும் நடைபெறுகின்றன.

எனவே, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட, பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணியில் தனி கவனம் செலுத்தவேண்டும்.

அத்துமீறல்கள் குறித்து புகார்

18 வயது பூர்த்தியானவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்களின் பெயர்களையும் பட்டியலில் சேர்த்தல், வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல், பட்டியலில் உள்ள தவறுகளை சீர்செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில் அத்துமீறல்கள் ஏதேனும் இருந்தால், தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்து, உரிய தீர்வுகாண வேண்டும்.

அதிமுக சார்பில் அனைத்து வாக்குச்சாவடி நிலை முகவர்களையும் உடனடியாக நியமித்து, அதுதொடர்பான விவரங்களை அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை முனைப்புடன் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து, இப்பணி தொடர்பான விவரங்களை தலைமைக் கழகத்துக்கு அனைத்து மாவட்டச் செயலர்களும் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in