

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக ஒரு லட்சம் தன்னார்வலர்கள், 1000 மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில்உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த அக்.1 முதல் நவ. 2-ம் தேதி வரை 26.1 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பு அளவான 19 செ.மீ.யைவிட 37 சதவீதம் அதிகமாகும்.
வரும் டிசம்பர் வரை மழைஉள்ளதால், அனைத்து மாவட்டஆட்சியர்களையும் தயார் நிலையில்இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். அதுமட்டுமின்றி, காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளையும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கூறியுள்ளோம்.
தற்போது 6, 7 மாவட்டங்களில் அதிக மழை பெய்கிறது. மீனவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கி, அவர்கள் கடலுக்கு செல்வதை தடுத்து வருகிறோம்.
தமிழகத்தில் அதிக பாதிப்பு ஏற்படும் 1,000 இடங்களைக் கண்டறிந்து, மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். மாநிலம் முழுவதும் 1,000 பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இதுதவிர, கிராமங்களில் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள், ஏரி உடைப்பு, வெள்ளப்பெருக்கின்போது அதிகாரிகள் வருவதற்கு முன்னர் தடுப்பு, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
தமிழகத்தில் தற்போது ஏரிகள், அணைகள் 50 முதல் 90 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. அணைப் பகுதிகளில் மழை பெய்யும் அளவைக் கணக்கிட்டு, அதற்கேற்ப தண்ணீரைத் திறக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் பாதிப்பு இல்லை
சென்னையில் அதிக அளவில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. பழைய கட்டிடங்கள், மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் நேரிட்டது துரதிருஷ்ட சம்பவம். எனவே, தற்காப்பு நடவடிக்கைகளை் அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளோம்.
பொதுமக்களை தங்கவைக்க 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 5,106 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன. சென்னையில் மட்டும் 350 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டால், வேகமாக இணைப்பு கொடுக்கும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
திருவாரூர் மாவட்டத்தில் பயிர் சேதம் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில்இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மழை பாதிப்பு தகவல்
பொதுமக்கள் மழை பாதிப்பு தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க, மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை 1070, மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் TNSMART இணையதளத்திலும், 9445869848 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.