வேலூர் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.2.27 கோடி சிக்கியது: லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடவடிக்கை

வேலூர் பொதுப்பணித் துறை செயற்பொறியாளருக்கு சொந்தமான ஓசூர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ரூ.2.27 கோடி பணம். (அடுத்த படம்) பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஷோபனா.
வேலூர் பொதுப்பணித் துறை செயற்பொறியாளருக்கு சொந்தமான ஓசூர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ரூ.2.27 கோடி பணம். (அடுத்த படம்) பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஷோபனா.
Updated on
1 min read

வேலூர் கோட்ட பொதுப்பணித்துறை தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளரிடம் இருந்தும், ஓசூரில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையின்போது ரூ.2.27 கோடி ரொக்கம் பறிமுதல் செய்துள்ளனர்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொதுப்பணித் துறை வேலூர் கோட்ட தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் கட்டப்படும் அரசு கல்லூரிகளின் கட்டிடங்களுக்கு ஒப்பந்தம் வெளியிடுவது, பணிகளை பார்வையிடுவது, நிதிவிடுவிப்பது, தனியார் கல்லூரி கட்டிடங்களுக்கு தடையில்லா சான்று வழங்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது, வேலூர் கோட்ட பொதுப்பணி தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளராக ஷோபனா (57) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர், தீபாவளியை முன்னிட்டு ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலிப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதற்கிடையில், தொரப்பாடி - அரியூர் சாலையில் உள்ள உணவகம் அருகே அரசு வாகனத்தில் ஷோபனா நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் காத்திருந்தார். அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார் வாகனத்தை சோதனையிட்டதில் ரூ.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். பணத்துக்கு ஷோபனா உரிய விளக்கம் அளிக்காத நிலையில் மாவட்ட அலுவல் ஆய்வுக்குழு அலுவலர் முருகன் தந்த புகாரின்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து, பொதுப்பணித்துறை விடுதியில் ஷோபனா தங்கியுள்ள அறையில் நேற்று காலை சோதனை நடத்தினர். அங்கு கட்டுக்கட்டாக ரூ.15.85 லட்சம் ரொக்கம், ரூ.4 லட்சம் மதிப்புள்ள 3 காசோலைகள் மற்றும் அலுவலகம் தொடர்பான 18 ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அவரது ஓசூர் வீட்டிலும் சோதனை நடந்தது.

இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஓசூர் நேரு நகரில் உள்ள அவரது வீட்டில் ரூ.2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் என மொத்தம் ரூ.2.27 கோடி பணமும், 38 பவுன் தங்க நகைகள், 11 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 1.3 கிலோ வெள்ளி பொருட்கள், பல்வேறு வங்கிகளில் வைப்பு நிதியாக ரூ.27.98 லட்சத்துக்கான ஆவணங்கள், 14 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது” என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in