முல்லைப் பெரியாறு அணையில் அமைச்சர் துரைமுருகன் நாளை ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் அமைச்சர் துரைமுருகன் நாளை ஆய்வு
Updated on
2 min read

கேரளப் பகுதிக்கு தண்ணீர் திறந்தது தொடர்பாக விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் அதிருப்தி எழுந்ததை தொடர்ந்து, தமிழக நீர்வள ஆதாரத் துறை அமைச்சர் துரைமுருகன் பெரியாறு அணையில் நாளை (அக்.5) ஆய்வு செய்ய உள்ளார்.

முல்லை பெரியாறு அணையில் இருந்து கடந்த அக்.29-ம் தேதி கேரளப் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 2 ஷட்டர்கள் வழியாக விநாடிக்கு 514 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், கேரள வருவாய்த் துறை அமைச்சர் ராஜன், இடுக்கி ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் தண்ணீரை திறந்துவிட்டனர். அப்போது தமிழக அரசின் சார்பில் பெரியாறுஅணை செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி பொறியாளர் ராஜகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

விவசாயிகள் கடும் எதிர்ப்பு

இதனால் தண்ணீர் திறக்கும் உரிமையை தமிழகம் விட்டுக்கொடுத்துவிட்டதாக 5 மாவட்ட விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேனியில் நடந்த குறைதீர் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். மேலும் லோயர் கேம்ப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அதிமுக சார்பில் நவ.9-ம் தேதி 5 மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கேரள அரசின் நடவடிக்கைகளை கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றன. இப்பிரச்சினை பெரியாறு அணையால் பாசன வசதி பெறும் 5 மாவட்ட மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

நீர் திறப்பு குறித்து தமிழக நீர்வள ஆதாரத் துறை அமைச்சர் துரைமுருகன் அளித்த விளக்கத்தில், தமிழகத்தின் முழுக் கட்டுப்பாட்டில்தான் பெரியாறு அணை உள்ளது. தண்ணீர் திறக்கும் உரிமை ஏதும் விட்டுத் தரப்படவில்லை. அணையில் இருந்து தண்ணீரை திறந்தது தமிழக அதிகாரிகள்தான். கேரள அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆனால் தவறான தகவல் பரப்பப்படுகிறது எனத் தெரிவித்திருந்தார். கடந்த 6 நாட்களாக தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படும் நிலையில், நேற்று அதிகபட்சமாக விநாடிக்கு 3,981 கனஅடி வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் நாளை (அக்.5) பெரியாறு அணையை ஆய்வு செய்ய உள்ளார். இது குறித்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் கூறியதாவது: அமைச்சர் துரைமுருகன் வரும் அக்.5-ம் தேதி காலை 7 மணிக்கு விமானத்தில் மதுரை வருகிறார். அங்கிருந்து பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் தேக்கடி செல்கிறார். படகில் அணைப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளார்.

ஷட்டர் பகுதி, கேரளப் பகுதிக்குதண்ணீர் வெளியேறும் பகுதி, தண்ணீர் இருப்பு, நீர்வரத்து குறித்துஆய்வு செய்யும் அமைச்சர், அக்.29-ம் தேதி தண்ணீர் திறப்பின்போது என்ன நடந்தது என அதிகாரிகளிடம் விசாரிக்கிறார். பின்னர் அணை பராமரிப்பில் ஈடுபட்டுள்ள தமிழக அதிகாரிகளுடன் அமைச்சர்ஆலோசனை நடத்துகிறார். 2 நாட்கள் தேக்கடியில் தங்கும் அமைச்சர்மீண்டும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் ஏதும் நடந்துவிடாதபடி விழிப்புடன் இருப்பதற்கான அனைத்துநடவடிக்கைகளையும் உறுதிப்படுத்துவார்’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in