

லிங்கா திரைப்படத்தின் கதை மதுரை நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கதை திருட்டை கண்டுபிடிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமனம் செய்யக்கோரி புதிய மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரவிரத்தினம், தான் எழுதிய ‘முல்லைவனம் 999’ படத்தின் கதையைத் திருடி, ‘லிங்கா’ என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து வெளியிட்டு மோசடி செய்ததாகவும், கதை திருட்டில் ஈடுபட்ட லிங்கா படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மதுரை கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கதை திருட்டு நடைபெற்றுள்ளதா என்பதை கண்டுபிடிப்பதற்காக லிங்கா படத்தின் முழுக் கதையையும் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கன்னியாதேவி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது லிங்கா படக்குழு சார்பில் லிங்கா படத்தின் முழுக் கதையை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, ‘முல்லை வனம் 999’ கதை திருடப்பட்டுள் ளதா? என்பதை லிங்கா படத்தின் கதையுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்காக வழக்கறிஞர் ஆணையரை நியமனம் செய்யக் கோரி, ரவிரத்தினம் சார்பில் வழக்கறிஞர் கருணாநிதி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்க லிங்கா படக்குழுவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு (இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.