

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) 1,189 சதுர கிலோ மீட்டரிலும், சென்னைப் பெருநகர மாநகராட்சி 426 சதுர கிலோ மீட்டரிலும் அமைந்துள்ளது. 15 மண்டலங்கள், 20 பணிமனைகள் மூலம் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகள் கண்காணிக்கப்படுகின்றன. தற்போது தினமும் ஆயிரம் மில்லியன் லிட்டர் குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. மாநகராட்சி எல்லையில் மொத்தம் 6,697 கிலோ மீட்டர் நீளத்துக்கு பிரதான குடிநீர் குழாய்கள் உள்ளன. சென்னையில் மழைநீர் தேங்குவது, குடிநீரில் கழிவுநீர் கலப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றன.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பருவமழை முன்னேற்பாடுகள் குறித்துஉயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 முறை ஆலோசனை நடத்தியுள்ளார். பருவமழை பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் 40 முதல் 100 ஆண்டுகள் வரை பழமையான குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் உள்ளன. அவற்றில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். தேவைப்படும் இடங்களில் குழாய்களை மாற்றும் பணியும் நடைபெறுகிறது. தற்போது தண்டையார்பேட்டை, எழும்பூர், கே.கே.நகர் உட்பட 10 இடங்களில் இப்பணி நடைபெறுகிறது.
குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றல் தொடர்பாக தினமும் 380-க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. 5 நாட்களுக்குள் இந்தபுகார்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கழிவுநீர் குழாய் மேற்பகுதியில் அமைந்துள்ள பாதை (மேன் ஹோல்) வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுவது, குடிநீரில் கழிவுநீர் கலப்பது, போதுமான நேரம் குடிநீர் விநியோகம் செய்யாமல் இருப்பது தொடர்பான புகார்களே அதிக எண்ணிக்கையில் வருகின்றன.
முதல்வரின் தனிப்பிரிவு, சென்னைக் குடிநீர் வாரியத்தின் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள், செல்போன் செயலி, வாரிய மேலாண்மை இயக்குநர், வாரிய பொறியியல் இயக்குநர், வாரிய தொலைபேசி, இணையதளம், நேரில் புகார் அளித்தல் உட்பட 12 வழிகளில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தினமும் சராசரியாக 380-க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன.
மாநகராட்சிப் பகுதிகளில் 90 சதவீதம் தினசரி குடிநீர் விநியோகமும், சில பகுதிகளில் மட்டும் ஒருநாள் விட்டு ஒருநாளும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மின்தடை காரணமாகவே குடிநீர் விநியோகிக்கும் நேரம் குறைகிறது. அதுபோல கழிவுநீர் அகற்றுவதற்கான ஜெட்ராடிங் மிஷின் ஒருபகுதியில் பணியை முடித்துவிட்டு, அடுத்தபகுதிக்கு வரும் வரை ஏற்படும் தாமதத்தை தவிர்க்க முடியவில்லை. இருப்பினும், பாதிப்பைப் பொருத்து முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம்.