

மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியேறியவர் தொண்டு நிறுவனத்தின் உதவியால் தற்போது குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் அதிக அளவில் மனநோயாளிகள் சுற்றித்திரிவதைப் பார்க்கலாம்.
தமிழகம் மட்டுமல்லாமல் வட மாநிலங்களில் இருந்தும்கூட உப்பு ஏற்ற வரும் லாரிகளில் ஏறி மனநோயாளிகள் இங்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள்.
அவர்களை மாவட்ட நிர்வாகம் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மீட்டு மருத்துவ முதலுதவி அளித்து சென்னை கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பி வைப்பார்கள்.
அவ்வாறு கடந்த மாதம் 9-ம் தேதி கோடியக்கரை பகுதியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர் சந்திரமோகன் தலைமையிலான குழுவினர் சீர்காழி கார்டன் மனநல மறுவாழ்வு மையத்தின் உதவியுடன் மனநோயாளிகள் 14 பேரைப் பிடித்து முதலுதவி அளித்ததுடன் கார்டன் மனநல மறுவாழ்வு மையத்துக்கு கொண்டுவந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
அவர்களில் ஒருவர் வெகுவிரைவாக குணமடைந்து தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறினார்.
விழுப்புபம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் இளையனார் குப்பத்தைச் சேர்ந்த சவுரிமுத்து மகன் சின்னப்பன் என்பது என் பெயர், தாயின் பெயர் அங்கம்மாள் என்கிற மரியம்மை என்று தெரிவித்தார்.
தற்போது 63 வயதாகும் தனக்கு வேலு என்கிற மைக்கேல், ஜெயராமன் என்கிற சோமாஸ் ஆகிய சகோதரர்கள் உள்ளனர் என்ற விவரத்தையும் கூறிய சின்னப்பன், மீண்டும் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வசிக்க விரும்புவதாகவும், அங்கிருந்தபடியே சிகிச்சையை தொடர விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து கார்டன் மனநல சிகிச்சை மைய இயக்குநர் ஜெயந்தி உதயகுமார், உளவியலாளர் ராஜ்குமார் ஆகியோர் சின்னப்பனை நேற்று முன்தினம் இரவு இளையனார் குப்பத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, சின்னப்பன் 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் என்பது தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போனவுடன் பல இடங்களிலும் வெகுநாட்கள் தேடியும் கிடைக்காததால் சின்னப்பன் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் முடிவு செய்துவிட்டனராம்.
சின்னப்பனின் மனைவியும், ஒரு மகளும் இறந்துவிட்ட நிலையில், அவரது தம்பி ஜெயராமன் குடும்பத்தினர் சின்னப்பனை மகிழ்வோடு வரவேற்று தங்களோடு இணைத்துக் கொண்டனர்.
10 ஆண்டுகளூக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறியவர் தற்போது தங்களுடன் வந்து சேர்ந்திருப்பது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என ஜெயராமன் தெரிவித்தார்.