

கரோனா தொற்று என்னும் மன அழுத்தத்தைப் போக்க, தீபாவளியை உற்சாகத்துடன் வரவேற்கப் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தில், மக்கள் ஆர்வமின்றி இருந்ததால், பண்டிகை களையிழந்து காணப்பட்டது. 2-வது அலையின் தாக்கம் காரணமாக, சில மாதங்களுக்கு முன்னர் வரை, மக்களிடம் கடும் அச்சம் நிலவி வந்தது. மேலும், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, அனைத்துத் தொழில்களும் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன. இதனால் பலர் வேலைவாய்ப்பை இழந்து, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தனர்.
கரோனாவால், ஒட்டுமொத்த மக்களும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில், தடுப்பூசி காரணமாக கரோனா தொற்றுப் பரவல் குறைந்து, அதன் தாக்கமும் பெருமளவு குறைந்துள்ளது. இதனால், கரோனா கால ஊரடங்கில் இருந்த கட்டுப்பாடுகள் அதிக அளவில் தளர்த்தப்பட்டுவிட்டன.
இதனால், அனைத்துத் தொழில் துறைகளும் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துள்ளன. வேலைவாய்ப்பை இழந்து பலரும் மாற்று வாழ்வாதாரம் கிடைத்து, இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வந்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களில் பலர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.
கரோனாவால் ஏற்பட்ட நெருக்கடிகளில் இருந்து விடுபட்டுள்ள மக்களுக்குப் புத்துணர்வு அளிப்பது போல தீபாவளி பண்டிகை வந்துள்ளது. இதனை உற்சாகமாகக் கொண்டாட முடிவு செய்துள்ள பொதுமக்கள், புத்தாடைகள், வீட்டுக்குத் தேவையான உபயோகப் பொருட்களை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.
இதன் வெளிப்பாடாக, சேலம், ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி என மாவட்டத்தில் உள்ள நகர மற்றும் கிராமப் பகுதிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடைகளுக்குப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வந்து செல்கின்றனர். மேலும், பொருட்களை வாங்கும்போது, ஆங்காங்கே சிற்றுண்டிக் கடைகளில் விதவிதமான உணவுப் பண்டங்களைச் சுவைத்து மகிழ்கின்றனர்.
ஆன்லைன் கல்வியால் வீட்டிற்குள் முடங்கி இருந்த குழந்தைகளுக்கும் பலூன்கள், விளையாட்டுச் சாதனங்களை வாங்கிக் கொடுத்துப் பெற்றோர்கள் மகிழ்கின்றனர். இதனால், கடை வீதிகள் யாவும் திருவிழாக் கொண்டாட்டத்தில் காணப்படுகின்றன. கரோனா கால மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் உற்சாகத்துடன் மீண்டுவரும் அருமருந்தாக தீபாவளி பண்டிகை வந்துள்ளது. இதனை மக்கள் மகிழ்ச்சியுடன் ஆர்வத்துடனும் வரவேற்றுக் கொண்டாடுகின்றனர்.