பழனியில் நவ.9-ம் தேதி சூரசம்ஹாரம் விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை 

பழனியில் நவ.9-ம் தேதி சூரசம்ஹாரம் விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை 
Updated on
1 min read

பழனியில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் கூறும்போது, “திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று (நவ.,4) தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை மலைக்கோயிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் வழக்கமாக பக்தர்கள் பங்கேற்று காப்பு கட்டுவர். இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காப்பு கட்டும் நிகழ்ச்சி முடிந்த பிறகு பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்யலாம்.

தொடர்ந்து விழா முடியும் வரை காலை, மாலை சுவாமி புறப்பாடு மலைக்கோயிலில் நடைபெறும். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். பகல் 2.45 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து சன்னதி திருக்காப்பிடப்படும் (நடை சாத்துதல்).

மாலை 6 மணிக்கு மேல் மலையடிவாரம் கிரிவீதியில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. இதைத் தொடர்ந்து மறுநாள் காலை நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. விழா நாட்களில் மண்டகப்படிகள் அனைத்தும் கோயில் சார்பில் நடத்தப்படவுள்ளன.

சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் யூடியூப் சேனல் மற்றும் வலைதளங்கள் வாயிலாக ஒளிபரப்ப கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்து கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in