நிதி பெறும் விவகாரம்; தமிழக அரசு போலியான நாடகத்தை அரங்கேற்றியுள்ளது: எல்.முருகன் குற்றச்சாட்டு

எல்.முருகன் | கோப்புப் படம்.
எல்.முருகன் | கோப்புப் படம்.
Updated on
1 min read

மத்திய அரசு சரியான நேரத்தில் நிதி வழங்கவில்லை எனத் தமிழக அரசு கடிதம் எழுதி, போலியான நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்ததார்.

அப்போது அவர் கூறியதாவது:

''மத்திய அரசு விதிகளின்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைகளைத் தீர்க்கும் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். இன்று வரை தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் குறை தீர்க்கும் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மேலும் சுயாதீன சமூக தணிக்கைப் பிரிவு அமைக்க நீண்ட நாட்களாகக் கோரியும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.

சுயாதீன சமூக தணிக்கை அதிகாரி ஒருவர் மூலம் 246 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அதனை மீட்கக் கோரியதில் இதுவரை 1.85 கோடி ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. உள்துறை தணிக்கையில் உள்ள 92 குறைகள் சுட்டிக்காட்டப்பட்டும் இன்றுவரை குறைகள் சரி செய்யப்படவில்லை. இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி முதல்வரின் செயலாளரிடம் கேட்கப்பட்டுள்ளது.

நிதி வழங்கும் நடைமுறை மிகவும் எளிய முறை. இதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதால் வருமான வரி தாக்கல் செய்யப்படுவது இயல்பு. கடந்த மாதம் மத்திய அரசின் நிதியைப் பெறத் தமிழக அரசு அக்டோபர் மாதம் 1ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டிய செலவினக் கணக்கை 27ஆம் தேதிதான் ஒப்படைத்தது. அப்படி இருக்கையில், தேவையின்றி மத்திய அரசு சரியான நேரத்தில் நிதி வழங்கவில்லை எனத் தமிழக அரசு கடிதம் எழுதி, போலியான நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி இலங்கைக் கடற்படையினரால் 23 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களை மீட்க தமிழக அரசிடம் மீனவர்களின் விவரங்களை வெளியுறவுத்துறை கேட்டிருந்த நிலையில், அக்டோபர் 25-ம் தேதி வரை தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்த விவரமும் வழங்கப்படவில்லை''.

இவ்வாறு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in