

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 37% அதிகம் பெய்துள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எழிலகத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியதாவது:
”தமிழ்நாட்டில், வடகிழக்குப் பருவமழை 1.10.2021 முதல் 2.11.2021 வரை 261.7 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 190.9 மி.மீட்டரை விட 37% கூடுதல். அரியலூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவீதத்திற்கு மேல் மிக அதிகப்படியான மழை பெய்துள்ளது.
கடலூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய 19 மாவட்டங்களில் இயல்பை விட 20 சதவீதத்திற்கு மேல் மழை பெய்துள்ளது.
செங்கல்பட்டு, சென்னை, தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, ராமநாதபுரம், சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் இயல்பான மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில், இந்த ஆண்டு ஜனவரி முதல் 02.11.2021 வரை இயல்பான மழையளவை (680.1 மி.மீ.) விட 36 சதவீதம் (926.1 மி.மீ.) அதிக மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 90 அணைகளில், 58 அணைகள், 50 விழுக்காட்டிற்கு மேல் நிரம்பியுள்ளது.
கடந்த 24.09.2021 மற்றும் 26.10.2021 ஆகிய நாட்களில் முதல்வர், வடகிழக்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி விரிவான அறிவுரைகள் வழங்கியுள்ளார். மேலும், தலைமைச் செயலாளர் தலைமையில் 11.09.2021 அன்று ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
25.10.2021 தேதியிலிருந்து குமரிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக்கூடும் என்றும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியிலிருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது''.
இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.