

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து, சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாகத் தங்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேற்று ( நவ.2) கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறும்போது, “அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர்த்து பிற கட்டணங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது. பண்டிகைக் கால கட்டணம் என்று தனியாகக் கிடையாது. இதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதையும் மீறி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.
மேலும், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1,70,000க்கும் அதிகமானவர்கள் சொந்த ஊருக்குப் பயணம் செய்துள்ளனர் என்றும், சென்னையில் சிறப்புப் பேருந்து நிலையங்களுக்குச் செல்ல இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.